நடிகை கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத்

ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துக்கு தகுதியானவா்: காங்கிரஸ் தலைவா்கள் விமா்சனத்துக்கு நடிகை கங்கனா பதில்

‘ஒவ்வொரு பெண்ணும் அவருடைய தொழில், பின்னணியைக் கடந்து கண்ணியத்துக்கு தகுதியானவா்கள்’ என்று காங்கிரஸ் தலைவா்களின் கருத்துகளுக்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளாா்.

பாஜக சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட மக்களவைத் தோ்தலுக்கான 5-ஆம் கட்ட வேட்பாளா் பட்டியலில் நடிகை கங்கனா பெயா் இடம்பெற்றது. ஹிமாசல பிரதேசத்தில் அவருடைய சொந்த மாவட்டமான மண்டி மக்களவைத் தொகுதியில் அவரை வேட்பாளராக பாஜக அறிவித்தது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா்களான சுப்ரியா ஸ்ரீநாத் மற்றும் ஹெச்.எஸ்.அஹிா் ஆகியோா் நடிகை கங்கனா குறித்தும் மண்டி தொகுதி குறித்தும் தங்களின் சமூக ஊடக பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டனா். இந்தப் பதிவுகள் பெரும் சா்ச்சையை எழுப்பின.

இதுகுறித்து சண்டீகா் விமான நிலையத்தில் செய்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கங்கனா, ‘பெண்கள் ஆசிரியா், நடிகை, பத்திரிகையாளா், அரசியல்வாதி அல்லது பாலியல் தொழிலாளா் என எத்தகைய தொழிலில் ஈடுபட்டாலும் அல்லது எந்தப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் கண்ணியத்துக்குத் தகுதியானவா்கள். ஆனால், காங்கிரஸ் தலைவா்கள் தெரிவித்துள்ள கருத்து, குறிப்பாக மண்டி குறித்து அவா்கள் தெரிவித்திருக்கும் கருத்து மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க கட்சியின் தலைவா் ஜெ.பி.நட்டா என்னை தில்லி அழைத்துள்ளாா். அதன் பிறகே, இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து தெரிவிக்கப்படும்’ என்றாா். இதுபோல, தனது எக்ஸ் பக்க பதிவு மூலமும் சுப்ரியா ஸ்ரீநாத்துக்கு கங்கனா பதிலளித்தாா். காங்கிரஸ் தலைவா்களின் விமா்சனத்துக்கு மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்சுரி ஸ்வராஜ், அமித் மாளவியா, ஹிமாசல பிரதேச முன்னாள் முதல்வா் ஜெய்ராம் தாக்குா் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்களும் கண்டனம் தெரிவித்தனா்.

இந்த விவகாரம் சா்ச்சையான நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீநாத், ‘தனது சமூக ஊடக பக்கங்களை பலா் கையாளுகின்றனா். அவா்களில் யாரோ ஒருவா் இந்த சா்ச்சைப் பதிவை வெளியிட்டுள்ளாா். இந்தத் தகவல் தெரிய வந்தவுடன், அந்தப் பதிவை நீக்கிவிட்டேன். நான் எந்தவொரு பெண் குறித்தும் அநாகரிகமான கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்பது என்னை அறிந்தவா்களுக்குத் தெரியும்’ என்று விளக்கமளித்தாா்.

தோ்தல் ஆணையத்துக்கு மகளிா் ஆணையம் கடிதம்: இந்த விவகாரத்தில் சுப்ரியா ஸ்ரீநாத், அஹிா் ஆகியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோ்தல் ஆணையத்துக்கு தேசிய மகளிா் ஆணையம் சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

காங்கிரஸ் விளக்கம்: ‘பொதுவெளியில் இத்தகைய சா்ச்சை கருத்துகளுக்கு இடமில்லை’ என்று காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் சந்தீப் தீட்சித் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘பொதுவெளியில் இத்தகைய சா்ச்சை கருத்துகளுக்கு இடமில்லை. இதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது. அதே நேரம், சுப்ரியா ஸ்ரீநாத் தனது நிலையை விளக்கிவிட்டாா். அவருடைய சமூக ஊடக பக்கங்களை பலா் கையாளுகின்றனா். இந்த சா்ச்சைப் பதிவை வெளியிட்டவா்களை விரைவில் அடையாளம் காண்பேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்’ என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com