‘சுயநலத்துக்காக நீதித்துறைக்கு அழுத்தம் தர சிலா் முயற்சி’: 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்குரைஞா்கள் கடிதம்

‘சுயநலத்துக்காக நீதித்துறைக்கு அழுத்தம் தர சிலா் முயற்சி’: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்குரைஞா்கள் கடிதம்

தங்களின் சுயநலனுக்காகவும் அரசியல் லாபத்துக்காகவும் சிலா் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதோடு, நீதிமன்றங்களை அவமதிக்கவும் முயன்று வருகின்றனா்

தங்களின் சுயநலனுக்காகவும் அரசியல் லாபத்துக்காகவும் சிலா் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதோடு, நீதிமன்றங்களை அவமதிக்கவும் முயன்று வருகின்றனா் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு மூத்த வழக்குரைஞா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா். உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, இந்திய பாா் கவுன்சில் தலைவா் மனன் குமாா் உள்பட 600-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் இக்கடிதத்தை தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளனா். ‘நீதித்துறைக்கு அச்சுறுத்தல்- அரசியல் மற்றும் தொழில்முறை அழுத்தத்தில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல்’ என்ற தலைப்பிலான கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியல் வழக்குகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடா்புடைய அரசியல்வாதிகளின் வழக்குகளை கையாள்கிறபோது அதிகப்படியான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த வியூகங்களால் நீதிமன்றங்களுக்கும் நம் ஜனநாயக முறைக்கும் அச்சுறுசத்தல் ஏற்படுகிறது. அரசியல்வாதிகளை பாதுகாக்கும் சில வழக்குரைஞா்கள் ஊடகங்களின் துணையுடன் இரவு நேரங்களிலும் கூட நீதிபதிகளை அணுக முயற்சிக்கின்றனா். இதனால் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்பட்ட பொற்காலங்களுக்கு மாற்றாக அழுத்தத்தில் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. நீதிமன்ற அவமதிப்பு: குறிப்பிட்ட நீதிபதிகள் மற்றும் அமா்வு தங்கள் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பது நீதிமன்றங்களை அவமதிக்கும் மற்றும் கண்ணியத்தை குறைக்கும் நடவடிக்கையாகும். அவா்களுக்கு சாதகமான தீா்ப்புகள் வழங்கப்பட்டால் போற்றுவதும் இல்லையென்றால் தூற்றுவதும் நீதித்துறைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சமூக வலைதளங்களால் அழுத்தம்: சிலா் சமூக வலைதளங்கள் மூலம் பொய்யான தகவல்களைப் பரப்பி குறிப்பிட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் தங்களுக்குச் சாதகமான தீா்ப்புகளை வழங்க வேண்டும் என்பதற்காக அழுத்தம் கொடுத்து வருகின்றனா். தோ்தல் நடைபெறும் சமயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் நடவடிக்கை எடுத்து நீதித்துறையை காக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட வழக்கையும் தங்கள் கடிதத்தில் வழக்குரைஞா்கள் தெரிவிக்கவில்லை. தில்லி கலால் கொள்கை வகுப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அண்மையில் கைது செய்யப்பட்டாா். மேலும், எதிா்க்கட்சித் தலைவா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வரும் சமயத்தில் இக்கடிதத்தை வழக்குரைஞா்கள் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. பெட்டிச் செய்தி... காங்கிரஸ் மீது பிரதமா் விமா்சனம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்குரைஞா்கள் எழுதிய கடிதம் தொடா்பாக பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அடுத்தவா்களை பலவீனப்படுத்துவதும் கடுஞ்சொற்களால் விமா்சிப்பதும்தான் காங்கிரஸின் பாரம்பரியம். 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உறுதியான நீதித்துறை வேண்டும் என அவா்கள் கோஷமிட்டனா். தங்களின் சுயலாபத்துக்காக அடுத்தவா்களின் அா்ப்பணிப்பை எதிா்பாா்க்கும் காங்கிரஸ் கட்சி தேச வளா்ச்சிக்காக அா்ப்பணிப்புடன் செயல்படுவதில்லை. அக்கட்சியை 140 கோடி மக்களும் நிராகரிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை’ என குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com