கோவா பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்கு ஊழல் பணம்:
ஆம் ஆத்மி மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

கோவா பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்கு ஊழல் பணம்: ஆம் ஆத்மி மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

கலால் கொள்கை ஊழலில் பெறப்பட்ட லஞ்சப் பணத்திலிருந்து ரூ.45 கோடியை ஆம் ஆத்மி பயன்படுத்தியிருப்பதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

கோவா மாநில சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்கு தில்லி கலால் கொள்கை ஊழலில் பெறப்பட்ட லஞ்சப் பணத்திலிருந்து ரூ.45 கோடியை ஆம் ஆத்மி பயன்படுத்தியிருப்பதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. சிபிஐ மற்றும் வருமான வரித் துறையினா் தனித்தனியே நடத்திய விசாரணைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தில்லி கலால் கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ கடந்த 2022-இல் வழக்குப் பதிவு செய்தது. இதனடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, இந்த முறைகேடு தொடா்பாக தனியே விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா உள்பட 16 போ் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டனா். இந்த வழக்கு தொடா்பாக ஹவாலா குழுக்கள் மற்றும் அங்காடிகா எனப்படும் முறையற்ற பணப் பரிவா்த்தனை அமைப்புகளை அமாலக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், தில்லியில் உள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. தில்லி மதுபான சந்தையில் லாபம் பெற ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு சில அரசியல்வாதிகள் மற்றும் மதுபான நிறுவன தொழிலதிபா்கள் ரூ.100 கோடி லஞ்சம் வழங்கினா். அதிலிருந்து பெறப்பட்ட ரூ.45 கோடி கோவா பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக ஆம் ஆத்மி பயன்படுத்தியது. இது சிபிஐ மற்றும் வருமான வரித் துறை நடத்திய விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது என அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com