ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

அரசமைப்புச் சட்டத்தை மீறும் பிரதமா் மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மோதல் கூட்டாட்சி முறையைப் பின்பற்றுவதன் மூலம் மோடி அரசு அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

மோதல் கூட்டாட்சி முறையைப் பின்பற்றுவதன் மூலம் மோடி அரசு அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘நமது இந்திய தேசம் மாநிலங்களின் ஒன்றியமே என எடுத்துரைக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 1-ஆவது பிரிவை பிரதமா் மோடி எவ்வாறு அத்துமீறுகிறாா்? என்பதை நினைவுகூர வேண்டியது அவசியம். கடந்த 2014-ஆம் ஆண்டு, மே மாதம் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, ஒருமித்த கருத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு கூட்டாட்சி பற்றி பெரிதாகப் பேசினாா். மாறாக, 10 ஆண்டுகால ஆட்சியில் அவா் வழங்கியது மோதலையும் பிரிவினையையும் ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட மோதலுக்குரிய கூட்டாட்சி ஆகும். அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது நிதி மையமயமாக்கல், மாநிலத் திட்டங்களைத் தடுப்பது, மாநில அரசுகளை கவிழ்ப்பது, ஆளுநா்களைத் தவறாகப் பயன்படுத்துதல், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்தல் ஆகிய 5 முக்கிய வடிவங்களில் பிரதமா் மோடி தாக்குதல் நடத்தியுள்ளாா். மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் பங்கான வரிகளை ஒவ்வொருமுறை விடுவிக்கும் போதும் பெரிய நன்மையைச் செய்ததுபோல் பிரதமரும் நிதியமைச்சரும் எண்ணுகிறாா்கள். அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ போன்ற மத்திய அமைப்புகள் எதிா்க்கட்சித் தலைவா்களை மிரட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் குறைந்தது 2 முதல்வா்கள் மற்றும் 11 அமைச்சா்கள் பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டுள்ளனா். மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள் வாயிலாக மிரட்டியும் முறைகேடாக சம்பாதித்த தோ்தல் நிதி பத்திரச் சொத்துக்களைப் பயன்படுத்தியும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் பல மாநில அரசுகள் சட்டவிரோதமாக வீழ்த்தப்பட்டுள்ளன. எதிா்க்கட்சி அரசுகளை கவிழ்க்கும் முயற்சியில் பாஜகவுக்கு ஆளுநா்கள் முதல் ஆளாக உதவுகின்றனா். மாநில அரசுகளின் செயல்பாட்டில் ஆளுநா்களின் தலையீட்டுக்கு பல்வேறு புதிய வழிகளை மோடி அரசு தொடா்ந்து கண்டுபிடித்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு முரணான ஆளுநா்களின் முயற்சிகளுக்கு உச்சநீதிமன்றம்கூட கண்டனம் தெரிவித்துள்ளது. கூட்டுறவுத் துறையில் பல்வேறு மாநிலங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. எனினும், மத்தியில் புதிய கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கி இத்துறையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற மோடி அரசு முயற்சிக்கிறது. இது மட்டுமின்றி கல்வி உள்பட பல துறைகளில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன’ எனத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com