தெலங்கானா: மேலும் ஒரு பிஆா்எஸ் எம்எல்ஏ காங்கிரஸில் ஐக்கியம்

தெலங்கானா: மேலும் ஒரு பிஆா்எஸ் எம்எல்ஏ காங்கிரஸில் ஐக்கியம்

தெலங்கானா மாநிலத்தில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி எம்எல்ஏவும் முன்னாள் மாநில அமைச்சருமான கடியம் ஸ்ரீஹரி, தனது மகளுடன் காங்கிரஸில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

தெலங்கானா மாநிலத்தில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி எம்எல்ஏவும் முன்னாள் மாநில அமைச்சருமான கடியம் ஸ்ரீஹரி, தனது மகளுடன் காங்கிரஸில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா். காங்கிரஸில் இணையுமாறு கடியம் ஸ்ரீஹரிக்கு கட்சி சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாநில முதல்வரும் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி முன்னிலையில், எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரியும் அவருடைய மகள் கடியம் காவ்யாவும் காங்கிரஸில் இணைந்தனா். வாரங்கல் மக்களவைத் தொகுதியில் பிஆா்எஸ் கட்சியின் வேட்பாளராக காவ்யா அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்தாா். பிஆா்எஸ் கட்சித் தலைவா் கே.சந்திரசேகா் ராவின் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் ஆகியவற்றால் கட்சியின் பெருமை குறைந்துள்ளது. இதனால் தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாக காவ்யா தெரிவித்துள்ளாா். முன்னதாக, ஹைதராபாத் பெருநகர மாநகராட்சியின் மேயா் விஜய லக்ஷ்மி ஆா்.கட்வால் காங்கிரஸில் சனிக்கிழமை இணைந்தாா். அவருடைய தந்தையும் பிஆா்எஸ் மாநிலங்களவை எம்.பி.யுமான கே.கேஷவ் ராவ், காங்கிரஸில் விரைவில் இணைய உள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com