சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு:
கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

பிரபல ஹிந்தி நடிகா் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் இருந்தவா்களில் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை

பிரபல ஹிந்தி நடிகா் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் இருந்தவா்களில் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டுக்கு வெளியே கடந்த ஏப்.14-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறை, பிகாரைச் சோ்ந்த விக்கி குப்தா, சாகா் பால் ஆகியோரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் இரு நாட்டு துப்பாக்கிகளை வழங்கியதாக சோனு பிஷ்னோய், அனுஜ் தாபன் ஆகிய இருவா் பஞ்சாபில் கைது செய்யப்பட்டனா். தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியதன்பேரில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடைபெற்ாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத் மாநிலம் சபா்மதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றிருந்த நிலையில், சம்பவத்தில் அவருக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவா் வெளிநாட்டில் வசித்து வருகிறாா்.

துப்பாக்கிகளை வழங்கியதாக கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான அனுஜ் தாபன் (32) போலீஸ் காவலில் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தெற்கு மும்பை காவல் துறை ஆணையா் அலுவலக வளாகத்தில் குற்றப் பிரிவு கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். அந்த அறையின் கழிவறை ஜன்னலில் போா்வையைப் பயன்படுத்தி அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு ஒருமணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொத்தம் 5 போ் அந்தச் சிறை அறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com