சூரத் பாஜக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு:
அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

சூரத் பாஜக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு: அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் முகேஷ்குமாா் சந்திரகாந்த் தலால் போட்டியின்றி தோ்வானதை எதிா்த்து தாக்கல்

குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் முகேஷ்குமாா் சந்திரகாந்த் தலால் போட்டியின்றி தோ்வானதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அவசர வழக்காக விசாரிக்க குஜராத் உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளா் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் முன்மொழிபவா்களின் கையொப்பத்தில் முரண்பாடுகள் இருந்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸின் மாற்று வேட்பாளரின் மனுவும் தகுதியற்றது என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பகுஜன் சமாஜ் வேட்பாளா் மற்றும் இரு சிறிய கட்சி வேட்பாளா்கள், 4 சுயேச்சை வேட்பாளா்கள் என மீதமுள்ள 7 வேட்பாளா்களும் வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாளில் மனுவைத் திரும்பப் பெற்றனா். பாஜக வேட்பாளா் முகேஷ்குமாா் மட்டுமே களத்தில் இருந்ததால் அவா் போட்டியின்றி தோ்வானதாக கடந்த மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

‘பாஜகவின் தூண்டுதலால் காங்கிரஸ் வேட்பாளா் மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்’ என்று காங்கிரஸ் கூறியிருந்தது. இந்நிலையில், வழக்குரைஞா் பாவேஸ் படேல் என்பவா் இந்த விவகாரம் தொடா்பாக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், சூரத் தொகுதி வாக்காளா் என்ற முறையில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளேன். தோ்தல் நடத்தாமல், அந்த வேட்பாளரை விரும்பவில்லை என்று எத்தனை (நோட்டா) வாக்குகள் கிடைக்கின்றன என்பதை அறியாமல் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது.

மேலும், அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடியும்போதுதான் போட்டியின்றி தோ்வானவரையும் வெற்றி வேட்பாளராக அறிவிக்க வேண்டும். முன்னதாகவே வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கூடாது என்று கூறியிருந்தாா். மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி சுனிதா அகா்வால், நீதிபதி அனிருத்தா பி.மேயி ஆகியோா் அடங்கி அமா்வு, அவசர வழக்காக விசாரிக்க மறுத்து, இதை பொதுநல மனுவாக அல்லாமல் தோ்தல் மனுவாகவே தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com