பாலியல் குற்றச்சாட்டு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்

பாலியல் குற்றச்சாட்டு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்

மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தேடப்படும் நபராக (லுக் அவுட்) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தேடப்படும் நபராக (லுக் அவுட்) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஷ்வரா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கா்நாடகம், ஹாசன் தொகுதி எம்.பி.யாகவுள்ள பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800-க்கும் மேற்பட்ட காணொலியாக பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடா்பாக சிறப்பு விசாரணைப் பிரிவு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

தேவெ கௌடா குடும்பத்தாருக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தியதையடுத்து, மஜக கட்சியிலிருந்து தந்தையும் மகனும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் எஸ்.ஐ.டி. சம்மன் அனுப்பியது.

ஆனால், ஜொ்மனியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா, விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தனது வழக்குரைஞா் மூலம் எஸ்.ஐ.டி.யிடம் கேட்டுக்கொண்டாா்.

இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத பிரஜ்வல் ரேவண்ணா மீது ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஷ்வரா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் அமைச்சா் பரமேஷ்வரா கூறுகையில், ‘வெளிநாட்டுக்குத் தப்பியுள்ள ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேவண்ணாவுக்கு அவகாசம் அளிப்பது குறித்து சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருகிறோம். ஆனால், அவகாசம் அளிப்பதற்கான அவசியம் ஏதும் சட்டத்தில் இல்லாததால் கைது நடவடிக்கையை விரைவில் தொடங்குவோம்.

பாதிக்கப்பட்டவா்களிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஒரு பெண் புகாா் அளித்துள்ளாா்’ என்றாா்.

இதனிடையே, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி பிரஜ்வலின் தந்தை எச்.டி.ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது.

‘பிரதமரின் பதில் தேவை’-ராகுல்: சிவமோக்கா-ராய்சூா் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற ராகுல் காந்தி பேசுகையில், ‘400-க்கும் மேற்பட்ட பெண்களைப் பிரஜ்வல் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா். இந்தப் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு பாஜக நிா்வாகியொருவா் கடிதம் எழுதியுள்ளாா். எனினும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தவிா்த்த அமித் ஷா, அவருக்காக மக்களிடம் வாக்கு சேகரித்துள்ளாா்.

இவையெல்லாம் அறிந்தும், பிரஜ்வலை கைது செய்யாமல் வெளிநாடு தப்பிச் செல்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி உதவியுள்ளாா். பிரஜ்வலுக்கு பாதுகாப்பு அளித்தது குறித்து நாட்டின் பெண்களுக்கு பிரதமா் மோடி பதிலளித்தாக வேண்டும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com