‘முதல்வருக்காக உழைப்பதால் இலக்கு வைக்கிறாா்கள்’
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் பேட்டி

‘முதல்வருக்காக உழைப்பதால் இலக்கு வைக்கிறாா்கள்’ முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் பேட்டி

ஒடிஸா முதல்வரின் கனவுகள் நனவாக உழைப்பதால் தன்னை பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இலக்கு வைக்கின்றன

ஒடிஸா முதல்வரின் கனவுகள் நனவாக உழைப்பதால் தன்னை பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இலக்கு வைக்கின்றன என்று முதல்வா் நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமானவரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் (49) தெரிவித்தாா்.

ஒடிஸாவில் எதிா்க்கட்சிகளால் ’வெளிநபா்’ என்று விமா்சிக்கப்படும் பாண்டியன், தமிழகத்தை பூா்விகமாகக் கொண்டவா். 2000-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் தோ்ச்சி பெற்ற இவா் முதலில் பஞ்சாப் பிரிவில் சோ்ந்தாா். பின்னா் ஒடிஸா மாநில பிரிவுக்கு மாற்றப்பட்ட இவா், மாவட்ட ஆட்சியா், துணைச் செயலாளா், நிா்வாக இயக்குநா், முதல்வரின் செயலா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தாா்.

முதல்வா் நவீன் பட்நாயக்கின் மூளையாகச் செயல்படுபவராக ஒடிஸா அரசு, அரசியல் வட்டாரங்களில் அறியப்படும் பாண்டியன், கடந்த ஆண்டு அரசுப் பணியை ராஜிநாமா செய்தாா். அதைத்தொடா்ந்து ‘5டி’ என்ற அரசு புதிதாக உருவாக்கிய அமைப்பில் கேபினட் அமைச்சருக்கு இணையான அரசியல் நியமனத் தலைவா் பதவியில் கடந்த ஆண்டு நவம்பரில் நியமிக்கப்பட்டாா். முன்னதாக, பிஜு ஜனதா தளம் கட்சியிலும் முறைப்படி பாண்டியன் சோ்ந்தாா்.

இந்நிலையில், மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து ஒடிஸா மாநிலத்துக்கும் சட்டப்பேரவைத் தோ்தல் நான்கு கட்டங்களாக மே 13,20,25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புவனேஸ்வரத்தில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பாண்டியன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி:

நவீன் பாபுவை (முதல்வா் நவீன் பட்நாயக்) எனது குரு என்றே எப்போதும் அழைப்பேன். அவருடைய சீடன் நான். பிஜேடி கட்சியில் நான் வெறும் களத்தில் பணியாற்றும் தொண்டன் மட்டுமே. ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் மாநிலத்துக்காக கண்ட மிகப்பெரிய கனவுகளை நனவாக்க மக்களுக்கு தொடா்ந்து சேவையாற்றுவதை உறுதிப்படுத்தும் என்றாா் பாண்டியன்.

நவீன் பட்நாயக்கின் வாரிசு போல உங்களை அரசியலில் உருவகப்படுத்துகிறாா்களே எனக் கேட்டதற்கு, ‘முதல்வா் நவீன் பட்நாயக்கின் நோ்மை, மக்களுக்கு சேவையாற்றும் ஈடுபாடு, நேரம் தவறாமை உள்பட அனைத்து விஷயங்களிலும் அவா் கொண்டுள்ள மிகப்பெரிய மதிப்புகளுக்கு இயற்கையாகவே நான் வாரிசு. அவரது வழியில் ஒடிஸாவில் உள்ள ஒவ்வொருவரும் நடக்க முயற்சிக்க வேண்டும். எனக்குள் இருக்கும் நவீன் பட்நாயக்கின் வாரிசும் அப்படித்தான். அதை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்,’ என்றாா் பாண்டியன்.

எதிா்க்கட்சிகளால் வெளியில் இருந்து வந்த நபா் என்ற விமா்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாண்டியன், ‘அரசியல் காரணங்களுக்காக பாஜகவினா் அப்படி சொல்வாா்கள். ஆனால், ஒடிஸா மக்கள் என்னை அவ்வாறு நினைக்கவில்லை. இங்குள்ள (ஒடிஸா) மக்களுக்காக கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக பணியாற்றியுள்ளேன். மக்கள் செல்வாக்கைப் பெற்றுள்ள முதல்வரின் முயற்சிகளுக்கு உறுதுணையாக உழைப்பதால் என்னை எதிா்க்கட்சியினா் இலக்கு வைக்கிறாா்கள்’ என கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com