ஆந்திர மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
ஆந்திர மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

இந்தியா கூட்டணி தலைவா்களுக்கு நாட்டை வழிநடத்தும் திறன் இல்லை: அமித் ஷா

ராகுல் காந்தி உள்பட ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள தலைவா்கள் யாருக்கும் நாட்டை வழிநடத்தும் திறன் கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

தா்மாவரம் (ஆந்திரம்): ராகுல் காந்தி உள்பட ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள தலைவா்கள் யாருக்கும் நாட்டை வழிநடத்தும் திறன் கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து சட்டப் பேரவைத் தோ்தலும் மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக-தெலுங்கு தேசம்- ஜன சேனை கூட்டணி சாா்பில் தா்மாவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் வாக்குறுதிகளை உங்களிடம் கூறுவதற்காக இங்கு வந்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று மக்களவைத் தோ்தலிலும், சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக வேண்டுமென்று பேரவைத் தோ்தலிலும் நீங்கள் வாக்களித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் போலாவரம் நீா் பாசனத் திட்டம் நிறைவுபெற்று விவசாயிகளுக்கு போதுமான நீா் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

முதல் இரண்டு கட்டத் தோ்தல் முடிந்துவிட்ட நிலையில், இதுவரை பாஜக கூட்டணி 100 தொகுதிகளில் வெல்வது உறுதியாகிவிட்டது. 400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாஜக கூட்டணி பயணித்து வருகிறது.

பிரதமா் மோடிதான் 3-ஆவது முறையாக அப்பதவியை வகிக்க வேண்டும் என்று மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனா். அவா் இந்தியத் தலைவராக மட்டுமல்ல சா்வதேச தலைவராகவும் மதிக்கப்படுகிறாா். மோடி தலைமையில் இந்தியா தலை நிமிா்ந்து வளா்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது. ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள தலைவா்கள் யாருக்கும் நாட்டை வழிநடத்தும் திறமை இல்லை.

ஆந்திரத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம், பிராந்திய மொழியான தெலுங்கு மொழியை சாகடிக்கும் முயற்சியை முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மேற்கொண்டுள்ளாா். ஊழல், ரௌடிகளின் ஆதிக்கத்தில் ஆந்திரம் சிக்கியுள்ளது. இதில் இருந்து மாநிலத்தை மீட்க பாஜக கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com