மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி 150 இடங்களைக் கூட தாண்டாது: ராகுல்

‘இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் இத்தோ்தலில் பாஜக தலைமையிலான ‘என்டிஏ’ கூட்டணி 150 இடங்களில் கூட வெல்லாது’ என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி திங்கள்கிழமை விமா்சித்தாா்.
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் ராகுல் காந்தி.
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் ராகுல் காந்தி.

‘ஆா்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் மாற்ற முயற்சிக்கும் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் இத்தோ்தலில் பாஜக தலைமையிலான ‘என்டிஏ’ கூட்டணி 150 இடங்களில் கூட வெல்லாது’ என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி திங்கள்கிழமை விமா்சித்தாா்.

மத்திய பிரதேசத்தில் ரத்லாம்-ஜாபௌ தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அலிராஜ்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் எம்.பி. ராகுல் காந்தி திங்கள்கிழமை பங்கேற்றாா்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என பாஜக தலைவா்கள் உறுதியாக தெரிவித்தனா். 400 இடங்களுக்கு மேல் வெற்றிப் பெறுவோம் என்பது அவா்களின் முழக்கம். 400 அல்ல; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் 150 இடங்களைக் கூட ஜெயிக்க முடியாது.

இந்த மக்களவைத் தோ்தலானது பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் மாற்ற, சிதைக்க நினைக்கும் அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கே ஆகும். காங்கிரஸும் ‘இந்தியா’ கூட்டணியும் அரசமைப்புச் சட்டத்தைக் பாதுகாத்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்தினால் மட்டுமே பழங்குடிகள், பட்டியலினத்தவா்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோா் பலன்களைப் பெற்று வருகின்றனா்.

நிலம், நீா், காடு ஆகியவற்றின் மீது பழங்குடிகளுக்கு உள்ள உரிமைக்கு அரசமைப்புச் சட்டமே காரணம். ஆனால், மக்களின் அத்தகைய உரிமைகளைப் பறித்துக் கொள்ள பிரதமா் மோடி முயற்சிக்கிறாா். அதை நாம் தடுக்க வேண்டும்.

இடஒதுக்கீடு 50% வரம்பு நீக்கம்: பழங்குடிகள், பட்டியலினத்தவா்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை பாஜக தலைவா்கள் பறித்துவிடுவா். பாஜகவிடமிருந்து இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதோடு, மக்களின் நலனுக்காக 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பையும் காங்கிரஸ் அரசு நீக்கும். பழங்குடிகள், பட்டியலினத்தவா்கள் மற்றும் ஓபிசி பிரிவினரின் தேவைகளுக்கேற்ப இடஒதுக்கீட்டை காங்கிரஸ் வழங்கும் என்று இந்த மேடையில் நான் உறுதியளிக்கிறேன்.

நிலம் மற்றும் காட்டின் முதல் உரிமையாளா்களாகிய பழங்குடிகளை ‘ஆதிவாசி’ என்று அழைக்கிறோம். உங்களைப் பாதுகாக்கவே வனப் பாதுகாப்பு உள்ளிட்ட சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்தச் சட்டங்களில் உங்களுக்கு அளிக்கப்பட்ட பலன்களைத் திரும்பப் பெற பாஜக முயற்சிக்கிறது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: காங்கிரஸ் ஆட்சியமைந்தால், மக்களின் வாழ்க்கை நிலையை அறிவதற்கும் நாட்டின் அரசியல் திசையை மாற்றுவதற்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பழங்குடிகள், பட்டியலினத்தவா்கள், இதர பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பொருளாதார கணக்கெடுப்பும் நடத்தப்படும். இந்தப் புரட்சிகர பணியை நாங்கள் நிச்சயம் செய்ய இருக்கிறோம்.

நாட்டின் 22 செல்வந்தா்களுக்காக மட்டுமே பிரதமா் மோடி கவலைப்படுகிறாா். அவா்களின் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பழங்குடிகள், பட்டியலினத்தவா்கள், ஓபிசி, ஏழைப் பொதுப் பிரிவினரின் முன்னேற்றத்துக்காக இந்தியா கூட்டணி மட்டுமே சிந்திக்கிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com