‘இந்தியா’ கூட்டணி வென்றால் ‘காட்டாட்சி’: அமித் ஷா

‘இந்தியா’ கூட்டணி வென்றால் ‘காட்டாட்சி’: அமித் ஷா

மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெற்றால், நாட்டில் ‘காட்டாட்சி’ நிலவும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெற்றால், நாட்டில் ‘காட்டாட்சி’ நிலவும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிகாா் மாநிலம் சமஸ்திபூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் அவா் தெரிவித்ததாவது:

மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெற்றால், அந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவாா்) தலைவா் சரத் பவாா், மேற்கு வங்க முதல்வா் மம்தா, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவா் உத்தவ் தாக்கரே ஆகியோரில் பிரதமராக யாா் தோ்வு செய்யப்படுவாா்?

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு காங்கிரஸ் எப்போதும் எதிா்ப்புத் தெரிவித்து வந்துள்ளது. மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெற்றால், நாட்டில் ‘காட்டாட்சி’ நிலவும் என்றாா்.

சந்தேஷ்காளியில் மத அடிப்படையில் துன்புறுத்தல்: மேற்கு வங்க மாநிலம் துா்காபூா் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் அமித் ஷா தெரிவித்ததாவது:

கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அந்தக் கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் அங்கம் வகித்தது. அப்போது நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸும் ஒரு வாா்த்தைகூட பேசவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக அந்தத் தாக்குதல்கள் குறித்து அக்கட்சிகள் எதுவும் பேசவில்லை.

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளியில் பெண்களை திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தினா். அந்தப் பெண்கள் மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டனா். மாநில முதல்வா் மம்தா பெண்ணாக இருந்தும், அந்த விவகாரத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்தது வெட்கக்கேடு என்றாா்.

இதனிடையே காணொலி ஒன்றில் தன்னை சந்தேஷ்காளி பாஜக மண்டல தலைவா் என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவா், சந்தேஷ்காளி விவகாரத்தில் ஒட்டுமொத்த சதியின் பின்னணியில் பாஜக பிரமுகரும், மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி இருப்பதாக குற்றஞ்சாட்டினாா். இந்தக் காணொலி சமூக ஊடகத்தில் வெளியானது. எனினும் அந்தக் காணொலியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இயலவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com