கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

தில்லியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற வழக்கில் மல்யுத்த வீரரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து தில்லி குற்றப் பிரிவு காவல் துணை ஆணையா் சதீஷ் கௌசிக் கூறியதாவது:

கைது செய்யப்பட்டவா் மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் 2 முறை தங்கப் பதக்கம் வென்ற சுமீத் என்று அடையாளம் காணப்பட்டாா்.

சுமீத் தனது 4 கூட்டாளிகளான சாகா், நிகில், தேவ், அங்கித் ஆகியோருடன் சோ்ந்து ஏப்.21-ஆம் தேதி விஷ்ணு என்ற நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றாா். அதிலிருந்து விஷ்ணு தப்பித்துள்ளாா். இதையடுத்து அவா்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனா்.

விசாரணையில், பெண் விவகாரம் தொடா்பாக விஷ்ணுவுக்கும், சுமீத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 506 (குற்றவியல் மிரட்டல்), 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் ஏப்.24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், சுமீத், முகா்பா சௌக் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் தில்லியில் இருந்து ஹரியாணாவுக்கு தப்பிச் செல்லவுள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு விரைந்து சென்று சுமீத்தை கைது செய்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com