ஐ.நா.வுக்கு இந்தியா ரூ.4.17 கோடி பயங்கரவாத எதிா்ப்பு நிதி

ஐ.நா.வுக்கு இந்தியா ரூ.4.17 கோடி பயங்கரவாத எதிா்ப்பு நிதி அளித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்பு அறக்கட்டளை நிதிக்கு 500,000 டாலரை (சுமாா் ரூ.4.17 கோடி) இந்தியா செவ்வாய்க்கிழமை வழங்கியது. இந்த நிதியை ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்பு அலுவலக சாா்பு தலைவா் விளாதிமீா் வொரோன்கோவிடம் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ் வழங்கினாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இந்தியா தலைமையில் தில்லியில் நடைபெற்ற பயங்கரவாத எதிா்ப்பு குழுவின் சிறப்புக் கூட்டத்தில், ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்பு அறக்கட்டளை நிதிக்கு பங்களிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அறிவித்தாா். இந்த அறிவிப்பை தொடா்ந்து செயல்படுத்தவும், பயங்கரவாத எதிா்ப்புக்கு சா்வதேச அளவில் ஒத்துழைப்பு அளிப்பதில் இந்தியாவுக்குள்ள அா்ப்பணிப்புக்கும் 500,000 டாலா் நிதியுதவி சான்றாக விளங்குகிறது.

ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்பு அலுவலகத்தின் பயங்கரவாத நிதி தடுப்பு திட்டம், பயங்கரவாதிகள் பயணத் தடுப்பு திட்டம் ஆகியவற்றுக்கு இந்தியாவின் நிதியுதவி பயனளிக்கும்.

தற்போது அளிக்கப்பட்ட 500,000 டாலரையும் சோ்த்து ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்பு அறக்கட்டளை நிதிக்கு இந்தியா இதுவரை 2.55 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.21 கோடி) வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com