சமூக வலைத்தள பதிவு விவகாரம்: பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆஜராக பெங்களூரு போலீஸில் சம்மன்

சமூக வலைத்தள பதிவு விவகாரம்: பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆஜராக பெங்களூரு போலீஸில் சம்மன்

வாக்காளர்களிடையே பகைமையை உருவாக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள பெங்களூரு போலீஸார், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமுதாய வாக்காளர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டிருந்ததாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, கட்சியின் மாநிலத் தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்தில் மே 5ஆம் தேதி காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. அந்தப் புகாரில் கூறியிருந்ததாவது:

கர்நாடக பாஜக தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள காணொலியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா போன்ற சித்திரப் பொம்மைகளை வெளியிட்டுள்ளனர். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சமுதாயத்தினரை கூட்டில் இருக்கும் முட்டைகளைப் போல சித்தரித்துள்ளனர். முஸ்லிம்கள் என்ற பெரிய முட்டையை ராகுல் காந்தி இடுவது போல காணொலியில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சமுதாயத்திடம் பணத்தைப் பறித்து முஸ்லிம் சமுதாயத்திற்குக் கொடுப்பது போல சித்தரித்துள்ளனர். பல்வேறு மதங்கள், சமுதாயங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் இந்தக் காணொலி அமைக்கப்பட்டுள்ளது.

இது எஸ்.சி., எஸ்.டி., பிற சமுதாயத்தினரிடையே பகைமையை உருவாக்கும் வேலையாகும். எனவே இதன்மீது தக்க நடவடிக்கை வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்த புகாரின்பேரில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, கட்சியின் மாநிலத் தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 505(2), மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் பெங்களூரு ஹைகிரவுன்ட்ஸ் காவல் நிலையத்தில் போலீஸார் மே 6ஆம் தேதி வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

மேலும் சர்ச்சைக்குரிய காணொலியை தனது எக்ஸ் தளத்தில் இருந்து உடனடியாக நீக்கும்படி, கர்நாடக பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதையேற்று, அந்தக் காணொலியை கர்நாடக பாஜக நீக்கிவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா ஆகியோருக்கு ஹைகிரவுண்ட் காவல்நிலையம் புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், "இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காக, கையெழுத்திட்டிருக்கும் அதிகாரி முன்பு, இந்த நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் ஹைகிரவுன்ட்ஸ் காவல் நிலையத்தில் காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com