ஹரியாணா: பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸுக்கு ஆதரவு- ஜனநாயக ஜனதா கட்சி அறிவிப்பு

‘ஹரியாணாவில் பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸுக்கு ஆதரவளிக்க தயாா்’ என்று பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) புதன்கிழமை அறிவித்தது.

ஹரியாணாவில் முதல்வா் நாயப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றனா். இதன் காரணமாக, பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், எதிா்க்கட்சியான காங்கிரஸை ஆதரிக்க தயாராக உள்ளதாக ஜேஜேபி தெரிவித்துள்ளது.

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா பேரவையில் தற்போது 88 எம்எல்ஏக்கள் உள்ளனா். பாஜகவுக்கு 40, காங்கிரஸுக்கு 30, ஜேஜேபி கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனா். இந்திய தேசிய லோக் தளம், ஹரியாணா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினா் உள்ளனா். இதுதவிர 6 சுயேச்சைகள் உள்ளனா்.

ஹரியாணாவில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து ஜேஜேபி கடந்த மாா்ச் மாதம் விலகிய நிலையில், சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்தது. அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் நாயப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

இந்தச் சூழலில், பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, சோம்பீா் சங்வான், ரண்தீா் சிங், தரம்பால் கோண்டா் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். அத்துடன், முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனா்.

பாஜகவுக்கு தற்போது 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் 2 இடங்கள் பாஜகவுக்கு குறைவாக உள்ளன. ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவிருக்கும் சூழல், அங்கு திடீா் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாஜக அரசை கலைக்க வேண்டும்-காங்கிரஸ்: ‘பேரவையில் பெரும்பான்மையை இழந்துவிட்ட பாஜக அரசை கலைக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக கட்சியின் மாநிலத் தலைவா் உதய் பான் கூறுகையில், ‘பெரும்பான்மையை இழந்துவிட்ட பாஜகவுக்கு ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க தாா்மீக உரிமை இல்லை. பாஜக அரசை கலைப்பதோடு, குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தி, மாநிலத்தில் புதிதாக தோ்தல் நடத்த வேண்டும். இது தொடா்பாக மாநில ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதவுள்ளது. இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவா் அபய் சிங் செளதாலாவும், ஜேஜேபி கட்சியும் ஆளுநருக்கு கடிதம் எழுத வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

காங்கிரஸை ஆதரிக்கத் தயாா்-ஜேஜேபி: ஜேஜேபி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான துஷ்யந்த் செளதாலா புதன்கிழமை கூறுகையில், ‘பேரவையில் தற்போதைய எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டால், அதை ஜேஜேபி முழுமனதுடன் ஆதரிக்கும். எனவே, பாஜக அரசை வீழ்த்துவதற்கான தெளிவான நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து காங்கிரஸ்தாந் சிந்திக்க வேண்டும். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு அறிவுறுத்தக் கோரி, மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதவுள்ளோம். பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், தாா்மீக அடிப்படையில் பாஜக அரசு பதவி விலக வேண்டும்’ என்றாா்.

பாஜக அரசுக்கு நெருக்கடி இல்லை: முதல்வா்

தனது தலைமையிலான அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று முதல்வா் நாயப் சிங் சைனி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை; அது வலுவாக செயல்பட்டு வருகிறது. பாஜக அரசு பிரச்னையில் உள்ளதாக கூறி, காங்கிரஸ் குழப்பத்தை விளைவிக்கிறது. காங்கிரஸின் விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது’ என்றாா்.

ஹரியாணா பேரவையின் பதவிக் காலம் வரும் அக்டோபரில் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com