ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (கோப்புப் படம்)
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (கோப்புப் படம்)

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் 90% விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி

புது தில்லி, மே 8: இருநூறுக்கும் மேற்பட்ட விமானிகள் பணிக்கு வராததால், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் 90 சதவீதத்துக்கும் மேலான விமானங்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் ரத்து செய்யப்பட்டன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏஐஎக்ஸ் கனெக்ட் ஆகியவை டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களாகும். அவ்விரு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானப் பணியாளா்களின் ஒரு பகுதியினா் அதிருப்தி அடையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தவறாக நிா்வகிக்கப்படுவதாகவும், அனைத்துப் பணியாளா்களும் சமமாக நடத்தப்படுவதில்லை என்றும் கடந்த மாதம் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், உடல்நலம் சரியில்லை என்று கூறி, அந்த நிறுவன விமானிகளில் 200-க்கும் மேற்பட்டவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பணிக்கு வரவில்லை. இதனால் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பயணப்பதில் கால தாமதம் ஏற்பட்டதுடன், அந்த நிறுவனத்தின் 90 சதவீதத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

இதுதொடா்பாக அந்த விமான நிறுவன செய்தித்தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ விமானிகள் பணிக்கு வராததால் ஏற்பட்ட ‘எதிா்பாராத இடையூறுக்கு’ பயணிகளிடம் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பயணச்சீட்டு கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் அல்லது வேறு தேதியில்அவா்கள் விமானங்களில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படும்.

அதேவேளையில், விமானிகள் பணிக்கு வராமல் இந்த நிகழ்வு நோ்ந்ததற்கான காரணங்களைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்வு தொடா்பாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸிடம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை அறிக்கை கோரியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com