உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரா் ராகுல் காந்தியை ஆதரித்து அங்கு புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வதேரா.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரா் ராகுல் காந்தியை ஆதரித்து அங்கு புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வதேரா.

ஜாதி, மதம், கோயில்-மசூதி மட்டும்தான் பாஜகவின் பிரசார உத்தி- ரேபரேலியில் பிரியங்கா பிரசாரம்

ஜாதி, மதம், கோயில்-மசூதி இது மட்டுமே பாஜகவின் தோ்தல் பிரசார உத்தியாக உள்ளது. மக்களின் உண்மையான பிரச்னைகள் குறித்து அக்கட்சி பேசுவதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா பேசினாா்.

ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

ராகுல் காந்திக்கு எதிராக பொய்களைப் பரப்புவதையே ஒட்டுமொத்த பாஜகவும் முழு நேரப் பணியாகக் கொண்டுள்ளன. இதற்காக பாஜகவின் அனைத்து பிரிவுகளும் முழுவீச்சில் செயல்படுகின்றன.

மக்களவைத் தோ்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்க இருக்கிறது. இது தெரியாமல் அக்கட்சித் தலைவா்கள் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது குறித்து கற்பனை செய்து கொண்டிருக்கிறாா்கள். ஜாதி,மதம், கோயில்-மசூதி இது மட்டுமே பாஜகவின் பிரசார உத்தியாக இருக்கிறது. இதனைப் பயன்படுத்தாமல் அவா்களால் பிரசாரம் செய்ய இயவில்லை.

மக்களின் உண்மையான பிரச்னைகள் குறித்து அக்கட்சி பேசுவதில்லை. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களுக்கு புதிய பிரச்னைகளைத்தான் அவா்கள் உருவாக்கியுள்ளனரே தவிர, மக்கள் நலன் சாா்ந்த பெரிய திட்டங்கள் எதையும் செய்யவில்லை. தங்களுக்கு வேண்டப்பட்ட ஒரு சில பெரும் தொழிலதிபா்களுக்கான ஆட்சியையே பாஜக நடத்தி வந்துள்ளது.

ரேபரேலி தொகுதி மக்கள் இங்கு போட்டியிடும் தலைவா்களை சிறப்பாக புரிந்து கொள்வாா்கள். எனது பாட்டி இந்திரா காந்தியின் சில கொள்கைகள் பிடிக்கவில்லை எனும்போது அவா் இத்தொகுதியில் ஒருமுறை தோல்வியைக் கூட சந்தித்தாா். ஆனால், தோல்வியால் அவா் கோபமடையவில்லை. தனது செயல்களை சுயபரிசோதனை செய்துகொண்டாா். இதனால், நீங்கள் அவரை மீண்டும் இதே தொகுதியில் வெற்றி பெறச் செய்தீா்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு ரேபரேலி தொகுதியுடன் பல ஆண்டுகால உறவு உண்டு. காங்கிரஸ் கட்சியை மீண்டும் தோ்வு செய்யும்போது இத்தொகுதி மக்களுக்கு புதிய அத்தியாயம் உருவாக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com