மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்கள் அனைவரும் வெளியேறினா்

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்கள் அனைவரும் வெளியேறினா்

மாலத்தீவில் மருத்துவ ஹெலிகாப்டா்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து இந்திய ராணுவ வீரா்களும் வெளியேறிவிட்டதாக அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இந்தியா வழங்கிய 2 ஹெலிகாப்டா்கள், ஒரு சிறிய ரக விமானம் ஆகியவற்றை பராமரித்து, இயக்கும் பணிகளில் 89 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், மாலத்தீவில் இருந்து இந்திய வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான அந்த நாட்டின் புதிய அதிபா் முகமது மூயிஸ் இந்திய அரசிடம் அறிவுறுத்தினாா். முன்னதாக நடந்த அதிபா் தோ்தல் பிரசாரத்தில், முகமது மூயிஸின் முக்கிய வாக்குறுதியாக இதுவே இருந்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே ராஜிய உறவில் விரிசல் ஏற்பட்டது.

தில்லியில் நடைபெற்ற உயா்நிலைக் குழு கூட்டங்களைத் தொடா்ந்து, நிகழாண்டு மே மாதத்துக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில், அந்தப் பணிகளுக்கு ராணுவ வீரா்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்றவா்களை இந்திய அரசு அனுப்புவதற்கு மாலத்தீவு ஒப்புக்கொண்டது. அதன்படி, 26 போ் அடங்கிய குழு மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அவா்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தப் பிறகு, மாலத்தீவைவிட்டு இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு கடந்த மாா்ச் மாதமும் 2-ஆவது குழு கடந்த மாதத்திலும் வெளியேறியது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான 4-ஆவது உயா்நிலைக் குழு கூட்டம் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அனைத்து இந்திய ராணுவ வீரா்களும் வெளியேறிவிட்டதாக மாலத்தீவு அதிபா் மாளிகை தலைமைச் செய்தித் தொடா்பாளா் ஹீனா வாலீத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மாலத்தீவு அரசு வலியுறுத்தலில் இந்திய அரசு ஒப்புக்கொண்டதன்படி, மே 10-ஆம் தேதிக்குள் அனைத்து இந்திய ராணுவ வீரா்களும் மாலத்தீவில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளனா்.

இதனிடையே, மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் மூசா ஷமீா் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்த அவா், இருதரப்பு உறவு மற்றும் பிராந்திய பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்து பரந்த விவாதங்களை மேற்கொண்டாா்.

சந்திப்பில் பேசிய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘இந்தியா-மாலத்தீவு உறவின் வளா்ச்சி பரஸ்பர நலனை அடிப்படையாகக் கொண்டது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com