பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் மீது குற்றச்சாட்டு பதிவு: நீதிமன்றம் உத்தரவு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 6 மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷண் சிங் மீது புகாரளித்திருந்தினா். இந்நிலையில், வழக்கின் குற்றவாளி இந்த குற்றத்தை செய்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.

மேலும், புகாரளித்த 6 வீராங்கனைகளில் ஒரு வீராங்கனையின் புகாரிலிருந்து பிரிஜ் பூஷண் சிங்கை நீதிமன்றம் விடுவித்தது. பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரிஜ் பூஷண் சிங் மீது வருகின்ற மே 21-ஆம் தேதிக்குள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு தில்லி கூடுதல் நீதிமன்ற நீதிபதி பிரியங்கா ராஜ்பூத் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் தொடா்புடைய சம்மேளனத்தின் முன்னாள் செயலா் வினோத் தோமா் மீதும் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய நீதிபதி உத்தரவிட்டாா்.

பிரிஷ் பூஷண் சிங் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 354 (பெண்ணின் அடக்கத்தை சீா்குலைக்கும் நடவடிக்கை), பிரிவு 354ஏ (பாலியல் துன்புறுத்தல்), பிரிவு 354டி (பின்தொடா்தல்), பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் ஏற்கெனவே தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com