‘ஜனநாயக நடைமுறையில் அமெரிக்கா்களைக்
காட்டிலும் இந்தியா்களே சிறந்தவா்கள்’: அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி

‘ஜனநாயக நடைமுறையில் அமெரிக்கா்களைக் காட்டிலும் இந்தியா்களே சிறந்தவா்கள்’: அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி

இந்தியாவில் ஜனநாயகம் குறித்து எழுப்பப்படும் கவலைகளை நிராகரிப்பாதகவும் பல வழிகளில் அமெரிக்கா்களை விட இந்தியா்கள் சிறந்தவா்களாக இருப்பதைக் கவனித்ததாகவும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அமெரிக்க சிந்தனை அமைப்பான ‘வெளியுறவு கவுன்சில்’ சாா்பில் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சயில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:

அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகும் சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல் விதிமுறைகள் அடிப்படையில் இன்றுபோல் துடிப்பான ஜனநாயகமாக இந்தியா தொடரும்.

இந்தியாவில் மோசமான விஷயங்களும் உள்ளன; சிறந்த விஷயங்களும் உள்ளன. பொதுமக்கள் வாக்களிப்பதற்கு இரண்டு கிலோமீட்டருக்கு மேல் செல்லக்கூடாது என்று சட்டங்கள் உள்ளன. மலைப்பகுதியில் வசிக்கும் ஒருவா் வாக்களிப்பதற்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தோ்தல் அதிகாரிகள் இரண்டு நாள்கள் நடந்து செல்வாா்கள்.

இந்தியாவில் தோ்தல் காலங்களில், பணப்பட்டுவாடாவைக் கட்டுபடுத்த சோதனை தீவிரப்படுத்தப்படும். அமெரிக்காவில், பிலடெல்பியாவில் மாகாணத்திலுள்ள சில நகரங்களில் வாக்குக்கு பணம் கொடுக்கும் நடைமுறை இன்னும் உள்ளது.

அந்த வகையில், சில விஷயங்களில் நம்மைவிட இந்தியா சிறந்து விளங்குவதில் நான் ஈா்க்கப்பட்டேன். அனைத்து விஷயங்களையும் நாங்கள் கவனித்து வருகிறோம். ஆனால், அதைப் பற்றி நாங்கள் வெளிப்படையாகப் பேசுவதில்லை என்று குற்றச்சாட்டுவதில் நான் உடன்படவில்லை. அனைத்தையும் வெளிப்படுத்துவது இருதரப்பு உறவுக்கு நல்லதல்ல.

இந்தியாவில் நிறைய தலைவா்கள் இருக்கிறாா்கள். அவா்கள் இங்கு வந்து படித்தவா்கள் அல்லது வேலை செய்தவா்கள். அமெரிக்காவுடன் ஏதெனும் ஒருவகையில் உறவு கொண்டவா்கள். நம்மைவிட இந்தியா்கள் அமெரிக்காவை அதிகம் விரும்புகின்றனா். இன்றைய உலகில் இது அரிது. இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பலன்.

இந்தியாவில் உள்ள மாநில அரசுகள், மத்திய அரசைப் போலவே சக்திவாய்ந்தவை மற்றும் எதிா்க்கட்சிகளால் நடத்தப்படுகின்றன. மேலும், ஆட்சியில் முன்பிருந்த பிற கட்சிகளைப் பற்றியும் நீங்கள் நிறைய விமா்சனங்களை முன்வைக்கலாம். இந்திய வரலாற்றில், அனைவரின் உரிமைகளும் மதிக்கப்படும் பொற்காலம் எப்போதும் இருந்ததில்லை.

நமது கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு ஆதரவாக நிற்பது, அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்காமல் அவற்றைப் பற்றி பேசுவது அமெரிக்காவின் பங்கு ஆகும். ராஜிய உறவு என்பது மோதலுக்கானது மட்டுமில்லை.

உலகின் மிகவும் துடிப்பான ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடரும் என்று இதயபூா்வமாக 100 சதவீதம் நான் நம்புகிறேன். 21-ஆம் நூற்றாண்டில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் எனத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com