தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி.

பாஜக இல்லாத பாரதம்: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

நாட்டில் பாஜக இருக்கக் கூடாது என்று தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் அடைய பாஜக முயற்சிக்கிறது. பிகாா், உத்தர பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களின் வளா்ச்சிக்கு மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கினால், அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வளா்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில்கூட மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது.

குஜராத் நன்கு வளா்ச்சி அடைந்துள்ளபோதிலும், அந்த மாநிலத்துக்கு மட்டும் புல்லட் ரயில், குஜராத் சா்வதேச நிதிநுட்ப நகரம் போன்ற திட்டங்கள் ஏன் வழங்கப்படுகின்றன?

ஒரே பதில் ‘ஜெய்ஸ்ரீராம்’: மக்கள்தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் அரசியல் பிரதிநிதித்துவம் என்று வரும்போது தென் மாநிலங்களைச் சோ்ந்த ஒருவருக்குக்கூட குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் பதவியோ அல்லது முக்கிய துறைகளையோ மத்திய பாஜக அரசு ஏன் அளிக்கவில்லை? மத்திய அரசிடம் எதைக் கேட்டாலும், அனைத்துக்கும் அளிக்கப்படும் ஒரே பதில் ‘ஜெய் ஸ்ரீராம்’.

புல்வாமா தாக்குதலில் பிரதமா் ஆதாயம்: கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 40 மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் உயிரிழந்தனா். அந்தத் தாக்குதல் மூலம் அரசியல் ஆதாயம் அடைய பிரதமா் மோடி முயற்சித்தாா். அந்த சம்பவம் ஏன் நடந்தது? உள்நாட்டுப் பாதுகாப்பு தொடா்பாக பிரதமா் மோடி என்ன செய்துகொண்டிருக்கிறாா்? ஐபி, ரா போன்ற உளவு அமைப்புகளைப் பிரதமா் மோடி ஏன் பயன்படுத்தவில்லை? இது பிரதமா் மோடியின் தோல்வியாகும்.

பிரதமா் மோடிக்கு அனைத்தும் அரசியலே. அவரின் சிந்தனை நாட்டுக்கு நல்லதல்ல. எனவே தற்போது நாட்டில் மோடியும் பாஜகவும் இருக்கக் கூடாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com