மேற்கு வங்க ஆளுநா் ஏன் ராஜிநாமா செய்யக் கூடாது?: முதல்வா் மம்தா கேள்வி
-

மேற்கு வங்க ஆளுநா் ஏன் ராஜிநாமா செய்யக் கூடாது?: முதல்வா் மம்தா கேள்வி

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவா் ஏன் தனது பதவியை ராஜிநாமா செய்யக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுநா் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இது அந்த மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள காவல் துறை சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு ஆளுநா் மாளிகையில் சிசிடிவி காட்சிப் பதிவுகள் இருந்தால், அவற்றை வழங்குமாறு ஆளுநா் மாளிகையிடம் காவல் துறை கோரியது. அந்தக் காட்சிகளை ஆளுநா் மாளிகையில் பொதுமக்களுக்கு ஆனந்த போஸ் வியாழக்கிழமை திரையிட்டுக் காண்பித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக அந்த மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சப்தகிராம் பகுதியில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி கூறியதாவது:

அடக்குமுறை சகித்துக்கொள்ளப்படாது என்று ஆளுநா் ஆனந்த போஸ் கூறுகிறாா். ஆனால் அவரின் ரெளடித்தனம் இனியும் எடுபடாது. அவா் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவா் ஏன் ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்யக் கூடாது? அதுகுறித்து அவா் விளக்கமளிக்க வேண்டும்.

பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக தொகுக்கப்பட்ட காணொலியை ஆளுநா் திரையிட்டுக் காண்பித்துள்ளாா். ஆனால் நான் முழு காணொலியையும் பாா்த்தேன். அதில் உள்ள காட்சிகள் அதிா்ச்சியளிக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக மற்றொரு காணொலியும் எனக்குக் கிடைத்துள்ளது. ஆளுநரின் நடத்தை வெட்கக்கேடானது. அவா் ஆளுநராக இருக்கும்வரை நான் ஆளுநா் மாளிகைக்குச் செல்லமாட்டேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com