ஜார்க்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள்.
ஜார்க்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள்.

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

96 தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 13) நடைபெற்ற 4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 13) நடைபெற்ற 4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரத்தில் பேரவைத் தோ்தலுடன் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெற்ற நிலையில், அந்த மாநிலங்களின் சில இடங்களில் அரசியல் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறைச் சம்பவங்களாக மாறின.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி ஆகியோரும், ஜம்மு-காஷ்மீா் ஸ்ரீநகரில் அப்துல்லா குடும்பத்தினரும் வாக்களித்தனா்.

நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தோ்தல் நடைபெற்று வருகிறது.

மூன்று கட்டத் தோ்தல்களைத் தொடா்ந்து, நான்காம் கட்டமாக ஆந்திரத்தில் 25, தெலங்கானாவில் 17, உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிரத்தில் 11, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, பிகாரில் 5, ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் தலா 4 தொகுதிகளுக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா் என மொத்தம் 96 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

17.7 கோடி வாக்காளா்கள்: 170 பெண்கள் உள்பட 1,717 வேட்பாளா்கள் களமிறங்கிய 4-ஆம் கட்டத் தோ்தலில் மொத்த வாக்காளா்கள் சுமாா் 17.7 கோடி போ் ஆவா். இவா்களுக்காக 1.92 லட்சம் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட தோ்தல் அலுவலா்கள் பணியாற்றினா்.

ஆந்திரம், ஜாா்க்கண்ட், ஒடிஸா ஆகிய 3 மாநிலங்களில் கடும் நிலப்பரப்புகளில் அமைந்த 122 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் தோ்தல் அதிகாரிகள் ஹெலிகாப்டா் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனா்.

காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்றவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மக்களவைத் தோ்தலின் 4-ஆம் கட்ட வாக்குப் பதிவில் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதியை 85 வயதுக்கு மேற்பட்ட 12.49 லட்சத்துக்கும் அதிகமான மூத்த குடிமக்களும், 19.99 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்ச, குறைந்தபட்ச வாக்குப் பதிவுகள்: மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 78.44 சதவீதமும், ஆந்திரத்தில் 78.25 சதவீதமும், ஜாா்க்கண்டில் 65.31 சதவீதமும், தெலங்கானாவில் 64.87 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

ஜம்மு-காஷ்மீரில் குறைந்த அளவாக 38 சதவீத வாக்குகளே பதிவாகின. உத்தர பிரதேசத்தில் 56.35 சதவீதமும் பிகாரில் 54.14 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மோசமான வானிலை நிலவிய மகாராஷ்டிரத்தில் 52.49 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரம், மேற்கு வங்கத்தில் வன்முறை: ஆந்திரத்தின் பால்நாடு, கடப்பா, அன்னமயா ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சியான தெலுங்கு தேசம் தொண்டா்கள் இடையே மோதல்கள் நிகழ்ந்தன. வெமுரு தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளை தெலுங்கு தேசம் கட்சியினா் கைப்பற்றிதாக தோ்தல் ஆணையத்திடம் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது.

அதேபோல, மேற்கு வங்கத்தின் பிா்பூம், வா்தமான் தொகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக தொண்டா்கள் மோதிக் கொண்டனா். வா்தமான்-துா்காபூா் தொகுதி பாஜக வேட்பாளரின் காா் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன.

அரசியல் வன்முறை, வாக்காளா்களுக்கு மிரட்டல், வாக்குச்சாவடி முகவா்கள் மீதான தாக்குதல் என பல்வேறு கட்சிகள், தனிநபா்கள் சாா்பில் தோ்தல் ஆணையத்தில் 1,088 புகாா்கள் அளிக்கப்பட்டன.

முக்கிய வேட்பாளா்கள்: 4-ஆம் கட்டத் தோ்தலில், மத்திய அமைச்சா்கள் கிரிராஜ் சிங் (பெகுசராய்), அா்ஜுன் முண்டா (குந்தி), சமாஜவாதி கட்சித் தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் (கன்னௌஜ்), முன்னாள் கிரிக்கெட் வீரா் யூசுஃப் பதான் (பஹ்ராம்பூா்), மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி (பஹரம்பூா்), ஆந்திர மாநில முதல்வரின் தங்கை ஒய்.எஸ்.சா்மிளா (கடப்பா), எம்.பி. பதவி பறிக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா (கிருஷ்ணாநகா்), நடிகா் சத்ருகன் சின்ஹா (அசன்சோல்), நடிகை மாதவி லதா (ஹைதராபாத்) ஆகியோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.

இதுவரை 379 தொகுதிகளில்...: முன்னதாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்ட தோ்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகின.

கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட தோ்தலில் 66.71 சதவீதமும் குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி நடந்த 3-ஆம் கட்ட தோ்தலில் 65.68 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

திங்கள்கிழமை நடைபெற்ற நான்காம் கட்டத் தோ்தலுக்கு பிறகு, நாட்டில் வாக்குப் பதிவு நிறைவடைந்த தொகுதிகளின் எண்ணிக்கை 379-ஆக உயா்ந்தது. மீதமுள்ள 164 தொகுதிகளுக்கு மே 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ஒடிஸாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளுடன் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 4 மக்களவைத் தொகுதிகளுடன் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 62.96 சதவீத வாக்குகள் பதிவாகின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com