பாகிஸ்தானின் அணுசக்தி: ‘இந்தியா' கூட்டணித் தலைவர்களுக்கு அச்சம்: பிரதமர் மோடி விமர்சனம்

பாகிஸ்தானின் அணுசக்தி: ‘இந்தியா' கூட்டணித் தலைவர்களுக்கு அச்சம்: பிரதமர் மோடி விமர்சனம்

பாகிஸ்தானின் அணுசக்தி குறித்து ‘இந்தியா' கூட்டணித் தலைவர்கள் அச்சப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்

பாகிஸ்தானின் அணுசக்தி குறித்து ‘இந்தியா' கூட்டணித் தலைவர்கள் அச்சப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ‘இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அண்மையில் கருத்து தெரிவிக்கையில் ‘பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் உள்ளன. அந்த நாடு வளையல்களை அணிந்திருக்கவில்லை' என்று கூறியிருந்தார்.

இந்தச் சூழலில் பிகார் மாநிலம், முசாஃபர்பூர், ஹாஜிபூர், சரண் ஆகிய நகரங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றபோது ஃபரூக் அப்துல்லாவின் கருத்தை மறைமுகமாக விமர்சித்தார். மோடி பேசியதாவது:

‘இந்தியா' கூட்டணித் தலைவர்கள் பாகிஸ்தானின் அணுசக்தியைக் கண்டு அஞ்சுகின்றனர். பாகிஸ்தான் வளையல்களை அணியாவிட்டால் நாம் அந்த நாட்டை அணிய வைப்போம். பாகிஸ்தானில் போதிய உணவு தானியங்கள் இல்லை என்று எனக்குத் தெரியும். அவர்களிடம் போதிய வளையல்களும் இல்லை என்பது எனக்கு தற்போது தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சிகளில் நிறைந்துள்ள கோழைகளை நாம் கவனத்துடன் பார்க்க வேண்டும். அவர்கள் பயங்கரவாத விஷயத்தில் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்குவதுடன் நம் நாடு பாகிஸ்தானில் நடத்திய துல்லியத் தாக்குதல் குறித்து சந்தேகமும் எழுப்புகின்றனர். அவர்களின் இடதுசாரி கூட்டணிக் கட்சிகளோ நம் நாடு தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்று விரும்புகின்றன.

’இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதன் ஐந்து தலைவர்கள் தலா ஓராண்டு வீதம் பிரதமர் பதவியை வகிப்பது என்ற திட்டத்தை அக்கூட்டணி உருவாக்கியுள்ளது. அந்தக் கூட்டணியின் திட்டத்தின்படி ஆண்டுக்கு ஒரு பிரதமர் வந்தால் என்ன மாதிரியான குழப்பம் ஏற்படும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

தற்போது நம் நாடு பெற்றுள்ள செல்வாக்கிற்கு மேலும் ஊக்கமளிக்கக் கூடிய அரசை உருவாக்குவதே தற்போதைய மக்களவைத் தேர்தலின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு எதிரான அதிரடிச் சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணமானது நாட்டின் ஏழைகளுக்குச் சொந்தம்.

அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைக்காக எதிர்க்கட்சிகள் ஏன் கண்ணீர் வடிக்கின்றன என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது அமலாக்கத் துறை ரூ. 35 லட்சத்தை மட்டுமே பறிமுதல் செய்தது. நாங்கள் (பாஜக கூட்டணி) ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 2,200 கோடியை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது என்றார்.

குருத்வாராவில் வழிபாடு: இந்நிலையில், பிகார் தலைநகர் பாட்னாவில் அமைந்துள்ள தகத் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாஹிப் குருத்வாராவுக்கு பிரதமர் மோடி சென்றார்.

சீக்கியர்களைப் போல் தலைப்பாகை அணிந்து சென்ற அவர், குருத்வாராவில் வழிபட்டார். அங்கு பக்தர்களுக்கு அவர் உணவு வழங்கினார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் "தகத் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாஹிப் குருத்வாராவில் பிரார்த்தனை செய்தேன். அந்தப் புனிதத் தலத்தில் வழிபட்டதால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். இந்த குருத்வாரா, மறைந்த சீக்கிய மத குருவான கோவிந்த் சிங்குடன் நெருங்கிய தொடர்புடையது. சீக்கிய குருமார்களின் போதனைகள் நம்மை தொடர்ந்து வழிநடத்தட்டும்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com