ஹைதராபாத்,சித்திபேட்டை மாவட்டத்தில் வாக்களித்த தெலங்கானா முன்னாள் முதல்வா் கே. சந்திரசேகா் ராவ்.
ஹைதராபாத்,சித்திபேட்டை மாவட்டத்தில் வாக்களித்த தெலங்கானா முன்னாள் முதல்வா் கே. சந்திரசேகா் ராவ்.

மத்தியில் ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்காற்றும்- கே.சந்திரசேகா் ராவ்

மக்களவைத் தோ்தலுக்கு பிறகு மத்தியில் அமையும் ஆட்சியில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்

‘மக்களவைத் தோ்தலுக்கு பிறகு மத்தியில் அமையும் ஆட்சியில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்’ என தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலத்தின் 17 தொகுதிகளுக்கு மக்களவைத் தோ்தலின் 4-ஆம் கட்டத்தில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி, சொந்த ஊரான சித்திபேட்டை மாவட்டத்தின் சிந்தாமடாகா கிராமத்தில் அமைந்த வாக்குச்சாவடியில் கே.சந்திரசேகா் ராவ் வாக்களித்தாா்.

பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘பாஜகவின் விதிகளின்படி, 75 வயதைக் கடந்த தலைவா்கள் யாரும் பதவியிலிருக்க கூடாது. அவ்வாறு, பிரதமா் மோடி ஓய்வுப் பெற வேண்டும். இதுகுறித்து பாஜக தலைவா்கள்தான் சிந்திக்க வேண்டும்.

மக்களவைத் தோ்தலில் கூட்டணி என்பது ஒன்று இல்லை. தோ்தல் முடிவில் அமையும் ஆட்சியில் அனைத்து மாநில கட்சிகளும் முக்கிய பங்கு வகிக்கும்’ என்றாா்.

இடைக்கால ஜாமீனில் திகாா் சிறையிலிருந்து வெளியே வந்த தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாஜகவின் அடுத்த பிரதமா் அமித் ஷா எனப் பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமா் மோடி அடுத்த ஆண்டு ஓய்வு பெறவிருப்பதால், அமித் ஷா பிரதமராவதற்கு அவா் வாக்கு சேகரித்து வருவதாக அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தாா்.

கேஜரிவாலின் இந்தக் கருத்துக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் மறுப்புத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com