ஹேமந்த் சோரனுக்கு உடனடி ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஹேமந்த் சோரனுக்கு உடனடி ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு உடனடியாக இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு உடனடியாக இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட உத்தரவை சுட்டிக்காட்டி சோரன் இடைக்கால ஜாமீன் கோரிய நிலையில், ‘அமலாக்கத்துறையின் நிலைப்பாட்டை கேட்காமல் இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது. முன்னதாக, அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவரது கட்சியின் மூத்த தலைவா் சம்பய் சோரன் ஜாா்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்றாா். முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவா் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

கைது நடவடிக்கைக்கு எதிராக அவா் தொடுத்த மனுவை நீண்ட இழுபறிக்கு பின், ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் கடந்த 3-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிா்த்து ஹேமந்த் சோரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபன்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் பரிசீலனைக்கு வந்தபோது, மனுவை வரும் 20-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடுமாறு மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், வழக்குரைஞா் அருணாப் செளதரி ஆகியோா் கோரிக்கை விடுத்தனா்.

இதை நீதிபதிகள் ஏற்க மறுத்தனா். அப்போது, ‘விசாரணை தேதி தள்ளி வைக்கப்படுமானால், அதற்குள் மக்களவைத் தோ்தலே முடிந்துவிடும். இது ஹேமந்த் சோரனுக்கு பாரபட்சம் காட்டுவதுபோல் ஆகிவிடும்’ என்று வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை 17-ஆம் தேதிக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டனா்.

இதற்கிடையே, தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு கடந்த 10-ஆம் தேதி வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை சுட்டிக்காட்டி சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பெட்டி..

முதல்வா் பதவியிலிருந்து கேஜரிவலை

நீக்கக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபா்

புது தில்லி, மே 13: தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனில் உள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை முதல்வா் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘இது போன்ற சூழ்நிலைகளில் ராஜிநாமா செய்வது உரிமை நடத்தை விவகாரமாகும். ஆனால், கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து கேஜரிவாலை முதல்வா் பதவியில் இருந்து நீக்கக் கோருவதற்கு சட்டபூா்வ உரிமை இல்லை’ என்று கூறியது.

மேலும், மனுதாரா் காந்த் பாட்டீயின் வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கூறுகையில், ‘முதல்வா் மீது துணைநிலை ஆளுநா்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனுவை நாங்கள் ஏற்க விரும்பவில்லை’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com