'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் 
நடனமாடிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நடனமாடிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

கல்யாணி: மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 முதல் 315 வரையிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பாஜக அதிகபட்சமாக 200 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம், கல்யாணி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:

சந்தேஷ்காளி விவகாரத்தில் பாஜகவினரும் பிரதமரும் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். உத்தரவாத மன்னர் (மோடி) மேற்கு வங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்.

தற்போது பல்வேறு விடியோக்கள் வெளியாகி உண்மை வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் அந்தக் காட்சிகளைக் காட்ட வேண்டாம் என்று பாஜகவினர் தொலைக்காட்சி சேனல்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 முதல் 315 வரையிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும். பாஜக அதிகபட்சமாக 200 இடங்களில் வெற்றி என்ற அளவுடன் கட்டுப்படுத்தப்படும். இந்த மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வர மாட்டார் என்பதே எங்களின் ஒரே உத்தரவாதமாகும்.

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த விட மாட்டோம்.

நமது மத வழக்கங்களாகட்டும் அல்லது உணவுப் பழக்கவழக்கங்களாகட்டும்; அனைத்திலும் பாஜகவினர் தலையிடுகின்றனர். இதை ஏற்க முடியாது. இது நீண்டகாலத்துக்குத் தொடர முடியாது என்றார்.

பிரதமருக்காக உணவு: மம்தா கருத்தால் சர்ச்சை

ஹிந்துக்கள் அசைவ உணவைத் தவிர்க்கக் கூடிய காலகட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் குறை கூறினார். இதற்கு பதிலளித்து கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தலி பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கூறியதாவது:

பிரதமருக்காக உணவு சமைத்துத் தர நான் தயார். ஆனால் அவர் எனது உணவை ஏற்றுக் கொள்வாரா? அவர் என்னை நம்புவாரா? அவர் எதை விரும்பினாலும் அதை நான் சமைத்துத் தருவேன்.

எனக்கு சைவ உணவான டோக்லாவும், அசைவ உணவான மீன் குழம்பும் பிடிக்கும். ஹிந்து மதத்தில் உள்ள பல்வேறு சமூகத்தினரிடையே பல்வேறு சடங்குகளும் உணவுப் பழக்கவழக்கங்களும் உள்ளனர்.

உணவுப் பழக்க வழக்கங்கள் மீது கட்டுப்பாடு விதிக்க பாஜக முயல்வதா என்ற மம்தாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com