ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: ’ஐசியூவில் இருந்த கணவரை உயிருடன் பார்க்க முடியவில்லை’ -மனைவி உருக்கம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமான ஊழியர்களின் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட கேரள குடும்பம்.
ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: ’ஐசியூவில் இருந்த கணவரை உயிருடன் பார்க்க முடியவில்லை’ -மனைவி உருக்கம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் வெளிநாட்டில் மரணப்படுக்கையில் கிடந்த தன் கணவர் உயிரிழப்பதற்கு முன், கடைசியாக அவரை ஒருமுறை பார்க்க முடியாமல் போனதாக இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தங்கள் தந்தையை பார்க்க ஏக்கத்துடன் காத்திருந்த குழந்தைகளின் கனவும் நிறைவேறாமல் போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்தின் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான ராஜேஷ். இவர் ஓமன் நாட்டில் தங்கி பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் ஓமனில் உள்ள ஓர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நலன் நலிவடைந்து வந்த நிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே, கேரளத்தில் வசிக்கும் தன் மனைவியையும் குழந்தைகளையும் தான் நேரில் ஒருமுறை பார்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, திருவனந்தபுரத்திலிருந்து மே. 8 ஆம் தேதி மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அவரது மனைவியும் குழந்தைகளும் இருக்கைகளை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக, அன்றைய நாள், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அவருக்காக அடுத்தநாள் மஸ்கட்டிற்கு புறப்படுவதாக இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் அந்த பெண்மணி.

எப்படியாவது மாற்று விமானத்தில் தன்னை மஸ்கட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பல முறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. தொடர்ச்சியாக அடுத்த 4 நாள்களுக்கு விமானங்களில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பிவிட்டதால், அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது கணவர் திங்கள்கிழமையன்று(மே. 13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோர செய்தி அவரது மனைவியின் காதில் இடியாய் இறங்கியது. விமானத்தில் முன்பதிவு செய்தும் பலனில்லாமல் போனதே என்ற வருத்தம் அவருக்கும் அவரது குழந்தைகளையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

ஓமனில் சிகிச்சை பெற்று வந்த நபர், இறுதிமூச்சை விடும் முன், தன் மனைவியையும் குழந்தைகளையும் பார்க்க மிகவும் ஆசைப்பட்டு ஏங்கியதாகவும், ஆனால் அது கனவாகவே முடிவடைந்து விட்டதாக மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தனர் அவரது உறவினர்கள்.

ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: ’ஐசியூவில் இருந்த கணவரை உயிருடன் பார்க்க முடியவில்லை’ -மனைவி உருக்கம்
சென்னை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனிவழி: கைவிட இப்படி ஒரு காரணமா?

இதனிடையே, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மே. 8 முதல் மே. 10-ஆம் தேதி வரை 260க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மே 10-ஆம் தேதியுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தவறாக நிா்வகிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, உடல்நலம் சரியில்லை என்று கூறி, அந்த நிறுவன விமானிகளில் 100-க்கும் மேற்பட்டவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பணிக்கு வரவில்லை. இதனால் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பயணப்பதில் கால தாமதம் ஏற்பட்டதுடன், அந்த நிறுவனத்தின் 90 சதவீதத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுனர்.

ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: ’ஐசியூவில் இருந்த கணவரை உயிருடன் பார்க்க முடியவில்லை’ -மனைவி உருக்கம்
அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

இந்த நிலையில், பயணிகளின் அத்தியாவசிய சேவைகளான விமான போக்குவரத்து சேவை, சில நாள்கள் தடைபட்டதால் ஒரு குடும்பம் பரிதவித்த சம்பவம் கேரளத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மரணமடைந்த ராஜேஷின் உடல் செவ்வாய்க்கிழமை(மே. 14) சொந்த ஊருக்கு வந்து சேரும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com