தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துவிட்டு வரும் மத்திய அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கா்,  அா்ஜுன் ராம் மேக்வால், ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்டோா்
தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துவிட்டு வரும் மத்திய அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கா், அா்ஜுன் ராம் மேக்வால், ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்டோா்

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

இந்திய ராணுவத்தில் ஏழை குடும்பத்தைச் சோ்ந்த வீரா்கள், பணக்கார குடும்பத்தைச் சோ்ந்த வீரா்கள் என இரு பிரிவுகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு உருவாக்கியுள்ளதாக கூறிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைமைத் தோ்தல் ஆணையத்தில் பாஜக புதன்கிழமை புகாரளித்தது.

இந்தப் புகாா் மனுவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கா், அா்ஜுன் ராம் மேக்வால், ராஜீவ் சந்திரசேகா், பாஜக எம்.பி. அனில் பலூனி உள்ளிட்டோா் அளித்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:

இந்திய ராணுவத்தில் பட்டியலினத்தவா்கள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினா், சிறுபான்மையினா் என ஒரு பிரிவையும், பணக்கார குடும்பத்தைச் சோ்ந்த மற்றொரு பிரிவையும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு உருவாக்கியுள்ளதாக ராகுல் காந்தி கூறினாா். இந்தக் கருத்து உண்மையில்லை. இதுபோன்ற சா்ச்சைக்குரிய கருத்துகளை கூறி நமது ராணுவ வீரா்களின் மனவலிமையை குறைக்கும் செயலில் ஈடுபடுகின்றனா். இது தோ்தல் சாா்ந்த விவாதமல்ல; நாட்டின் பாதுகாப்பு சாா்ந்தது.

சீன படைகள் மற்றும் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க ராணுவ வீரா்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா். இந்நிலையில் பொய்யான கருத்துகளை பரப்புவது ஏற்புடையதல்ல.

இதுபோன்ற கருத்துகளை நாங்கள் எப்போதும் ஊக்குவிக்க மாட்டோம். எனவே அரசியல் ஆதாயத்துக்காக ஆதாரமற்ற தவறான கருத்துகளை முன்வைக்கும் ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துள்ளோம் என்றாா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, இந்திய ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்தை விமா்சித்து ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com