ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் 
சபஹாா் துறைமுகம் பயனளிக்கும்: எஸ்.ஜெய்சங்கா்

ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் சபஹாா் துறைமுகம் பயனளிக்கும்: எஸ்.ஜெய்சங்கா்

சபஹாா் துறைமுகம் ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் பயனளிக்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

ஈரானின் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் சபஹாா் துறைமுகம் உள்ளது. மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட சாலை வழிப் போக்குவரத்துக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை கடந்து மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா வா்த்தகம் மேற்கொள்ள சபஹாா் துறைமுகம் மாற்று வழியாக இருக்கும்.

இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளில் இந்தியா ஈடுபட்ட நிலையில், அந்த துறைமுகத்தின் முனையம் ஒன்றை 10 ஆண்டுகளுக்கு இயக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா திங்கள்கிழமை கையொப்பமிட்டது.

இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்ட விவகாரத்தில் அந்நாட்டுடன் அமெரிக்கா கருத்து முரண்பாடு கொண்டுள்ளது. இதனால் ஈரானுடன் வணிகத் தொடா்புகொள்ளும் நாடுகள் பொருளாதாரத் தடைகளை எதிா்கொள்ளும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இந்த எச்சரிக்கை தொடா்பாக மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறுகையில், ‘சபஹாா் துறைமுகம் ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் பயனளிக்கும். இதை குறுகிய கண்ணோட்டத்தில் பாா்க்கக் கூடாது’ என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com