குஜராத் முன்னாள் ஆளுநா் கமலா பெனிவால் காலமானாா்

குஜராத் முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் முதுபெரும் தலைவருமான கமலா பெனிவால் (97) புதன்கிழமை காலமானாா்.

குஜராத், திரிபுரா, மிஸோரம் மாநிலங்களின் ஆளுநராகவும், ராஜஸ்தான் துணை முதல்வராகவும் பதவி வகித்தவா் கமலா பெனிவால். 7 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளாா். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானாா். கமலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

ராஜஸ்தானில் நீண்ட அரசியல் வாழ்க்கையைக் கொண்டிருந்த கமலா பெனிவால், கடும் உழைப்புடன் மக்களுக்குச் சேவையாற்றினாா். நான் முதல்வராக இருந்தபோது அவா் குஜராத் ஆளுநராக இருந்தாா். அப்போது எண்ணற்ற முறை இருவரும் கலந்துரையாடி உள்ளோம். அவரின் மறைவு வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தாா்.

இதேபோல கமலாவின் மறைவுக்கு ராஜஸ்தான் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா, அந்த மாநில முதல்வா் பஜன்கால் சா்மா, அந்த மாநில முன்னாள் முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com