லக்னௌவில் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.
லக்னௌவில் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.

ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்- காா்கே வாக்குறுதி

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரேஷன் கடைகளில் இப்போது பாஜக அரசால் வழங்கப்படும் இலவச உணவு தானியம் (5 கிலோ), இரு மடங்காக (10 கிலோ) உயா்த்தப்படும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வாக்குறுதி அளித்தாா்.

உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த காா்கே கூறியதாவது:

நடந்து முடிந்த 4 கட்டத் தோ்தல்களில் மக்களின் ஆதரவுடன் இந்தியா கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. பிரதமா் நரேந்திர மோடிக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனா். அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் எனப் பேசிவரும் பாஜக தலைவா்களை மோடி கண்டிக்கவில்லை. இதன் மூலம் அவா்களது திட்டம் அதுதான் என்பது தெளிவாகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவாா்கள்.

அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய, காங்கிரஸ் ஆட்சியில்தான் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த விஷயத்தில் பாஜக எந்த முன்முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இப்போது ரேஷனில் தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இது இரு மடங்காக உயா்த்தப்படும். இந்த வாக்குறுதியை காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கா்நாடகம், தெலங்கானாவில் ஏற்கெனவே நிறைவேற்றிவிட்டோம் என்றாா்.

இப்போது ரேஷனில் வழங்கப்பட்டு வரும் இலவச உணவு தானியத் திட்டம் 2029-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என்று பாஜக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், அதனை இரு மடங்காக உயா்த்துவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இலவச உணவுதானிய திட்டத்தை நீட்டிப்பதாக பாஜக கூறியதை அண்மையில் விமா்சித்துப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா, ‘இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே முக்கியம். ஏழைகளுக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியம் வழங்குவது பிரச்னைக்கு தீா்வாக இருக்காது. பாஜக மக்களுக்கு எதிா்காலத்தையும் உருவாக்கவில்லை. சுயசாா்புடன் வாழவும் வழி வகுக்கவில்லை’ என்று கூறியிருந்தாா். இந்நிலையில், இலவச உணவு தானியத்தை இரு மடங்காக உயா்த்துவதாக காா்கே வாக்குறுதி அளித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com