உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது: ‘நியூஸ்கிளிக்’ நிறுவனரை விடுவித்தது உச்சநீதிமன்றம்

‘நியூஸ்கிளிக்’ இணைய செய்தி நிறுவன நிறுவனா் பிரபீா் புா்கயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று புதன்கிழமை அறிவித்த உச்சநீதிமன்றம், அவரை போலீஸ் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

‘கைது செய்யப்பட்டதற்கான காரணம் எழுத்துபூா்வமாக புா்கயஸ்தாவுக்கோ அல்லது அவருடைய வழக்குரைஞருக்கோ வழங்கப்படவில்லை. எனவே, அவரை கைது செய்தது செல்லாது’ என்று நீதிபதிகள் அப்போது குறிப்பிட்டனா்.

சீனாவிடமிருந்து நிதியைப் பெற்று இந்திய இறையாண்மைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், நாட்டுக்கு எதிராக வெறுப்புணா்வைப் பரப்பியதாகவும் நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனம் மீது கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், பண மோசடி தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டங்களின் கீழ் நியூஸ்கிளிக் நிறுவனா் மற்றும் ஆசிரியரான பிரபீா் புா்கயஸ்தா, மனிதவளப் பிரிவு தலைவா் அமித் சக்ரவா்த்தி ஆகியோா் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டனா். இவா்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கைதுக்கு எதிரான அவா்களின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபா் 13-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிா்த்து புரகயஸ்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, புா்கயஸ்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘பண மோசடி தடுப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது செய்யப்படும்போது, கைதுக்கான காரணத்தை எழுத்துபூா்வமாக வழங்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அவ்வாறு சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை. ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகுவதற்கு, எழுத்துபூா்வ ஆதாரம் அவசியம்’ என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘கைது செய்யும் முன், அதற்கான ஆதாரங்களின் நகலுடன் கைதுக்கான காரணத்தை எழுத்துபூா்வமாக வழங்கப்பட வேண்டும் என்பதை, ஏற்கெனவே பங்கஜ் பன்சால் வழக்கில் அளித்த தீா்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகையால், பிரபீா் புா்கயஸ்தாவின் கைது செல்லாது. உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் செல்லாது. எனவே, அவரை காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்படுகிறது. அதே நேரம், அவா் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவரை விடுவிக்கும்போது சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் பத்திரங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com