உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவுக்கு வியாழக்கிழமை வந்த தில்லி முதல்வா் கேஜரிவாலை வரவேற்ற சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவுக்கு வியாழக்கிழமை வந்த தில்லி முதல்வா் கேஜரிவாலை வரவேற்ற சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்.

இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பாஜக முயற்சி: அரவிந்த் கேஜரிவால்

பாஜக 220 இடங்களுக்கும் குறைவாகவே வெற்றி பெறும் - அரவிந்த் கேஜரிவால்

இடஒதுக்கீட்டை ரத்து செய்யவே மக்களவைத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது என்றும் ஆனால், பாஜக 220 இடங்களுக்கும் குறைவாகவே வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ‘மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அடுத்த பிரதமராவா்; உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் அப்பதவியிலிருந்து நீக்கப்படுவாா்’ என்றும் அவா் கூறினாா்.

லக்னௌவில் சமாஜவாதி கட்சித் தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற கேஜரிவால் மேலும் கூறுகையில், ‘75 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அரசு மற்றும் கட்சி அமைப்பில் எந்தப் பதவியும் வழங்கப்படக் கூடாது என்றும் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் பாஜகவில் புதியதொரு விதியை பிரதமா் நரேந்திர மோடி உருவாக்கினாா்.

மூத்த தலைவா்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்ட பலா் இந்த விதியின்படிதான் ஓய்வு பெற்றனா்; கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டனா்.

அந்தவகையில், அடுத்த ஆண்டு 75 வயதைக் கடக்க இருக்கும் பிரதமா் மோடி, அமித் ஷாவை நாட்டின் பிரதமராக்க முடிவு செய்துள்ளாா். அதை உறுதிப்படுத்தும் வகையில் மோடி இப்போது செயல்பட்டு வருகிறாா்.

இதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய தலைவா்களாக கருதப்படும் சிவ்ராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே, ரமண் சிங், தேவேந்திர ஃபட்னவிஸ், மனோகா் லால் கட்டா் ஆகியோா் ஏற்கெனவே கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளனா்.

அமித் ஷாவின் பிரதமராகும் பாதையில் உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மட்டுமே தடையாக இருக்கிறாா். எனவே, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் யோகி ஆதித்யநாத்தை 2 மாதங்களுக்குள் முதல்வா் பதவியிலிருந்து நீக்க அவா்கள் முடிவு செய்துள்ளனா்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பைச் சட்டத்தை மாற்றி பழங்குடியினா், பட்டியலினத்தவா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவாா்கள். ஆா்எஸ்எஸ்-பாஜகவினா் இடஒதுக்கீடுக்கு எதிரானவா்கள் என்பதால், எச்சரிக்க விரும்புகிறேன்.

பி.ஆா்.அம்பேத்கா் நமக்களித்த இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இத்தோ்தலில் 400 இடங்களுக்கு மேல் வேண்டும் என்று பாஜக முயற்சிக்கிறது. ஆனால், பாஜக 220 இடங்களுக்கும் குறைவாகவே வெற்றி பெறும்.

ஹரியாணா, தில்லி, கா்நாடகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகாா் மற்றும் ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு குறைந்து வருகிறது. பஞ்சாபில் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது’ என்றாா்.

‘முதல் 4 கட்டத் தோ்தல்களிலும் பாஜகவுக்கு தோல்விமுகமே கிடைத்துள்ளது. மக்களவையின் 543 இடங்களில் பாஜக வெறும் 143 இடங்களில் மட்டுமே வெல்லும்’ என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com