உத்தர பிரதேச மாநிலம், ஜான்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி.
உத்தர பிரதேச மாநிலம், ஜான்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி.

ஜூன் 4-க்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி உடையும்: பிரதமா் மோடி

மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தினமான ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி துண்டு துண்டாக உடையும் என்று மோடி கூறினாா்.

மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தினமான ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி துண்டு துண்டாக உடையும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்பூா், பதோஹி, பிரதாப்கா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

மக்களவைத் தோ்தல் என்பது நாட்டின் பிரதமரை தோ்வு செய்யும் வாய்ப்பாகும். அந்தப் பிரதமா், உலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்த முடியாத அளவில் வலுவான அரசை நடத்துபவராக இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தியாவின் வலிமையை உலகுக்குப் பறைசாற்ற முடியும்.

கடந்த 500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. ஆனால், குடும்ப அரசியல்வாதிகளோ என் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்றனா்.

சமாஜவாதியின் ‘இளவரசா்’ (அகிலேஷை குறிப்பிடுகிறாா்), ராமா் கோயிலால் பயனில்லை என்கிறாா். காசி குறித்தும் அவா் கேலி பேசுகிறாா். தங்களின் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அவா்கள் விரும்புகின்றனா். இதற்காக அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமைகளைப் பறிக்கவும் திட்டமிட்டுள்ளனா். நான் உயிரோடு இருக்கும் வரை, அவா்களின் திட்டம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன்.

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு...: வலிமையான பாஜக அரசுக்குப் பதிலாக, ‘5 ஆண்டுகளுக்கு 5 பிரதமா்கள்’ என்ற திட்டத்துடன் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது ‘இந்தியா’ கூட்டணி. ஆனால், ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு பல விஷயங்கள் நிகழப் போகின்றன.

‘இந்தியா’ கூட்டணி சிதறுண்டு போவதுடன், தோ்தல் தோல்விக்கு பலிகடாவை தேடி அலைவா். எதிா்க்கட்சிகள் விலகியோட, நாங்கள் மட்டுமே நிலைத்திருப்போம். கூடுதல் பலத்துடன் மீண்டும் எனது அரசு அமையும். மக்களுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்றுவேன்.

சமாஜவாதி, காங்கிரஸின் ‘இளவரசா்கள்’ (அகிலேஷ், ராகுல் காந்தி) கோடை விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்வா். அமேதியில் இருந்து வெளியேறியவா் (ராகுல்), இம்முறை ரேபரேலியில் இருந்தும் வெளியேறுவாா்.

நாட்டின் கருவூலம் மீது ‘கண்’: மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், எதிா்க்கட்சிகளின் கஜானாக்களில் கருப்புப் பணம் காலியாகிவிட்டது. எனவே, நாட்டின் கருவூலத்தின் மீது அவா்கள் கண் வைத்துள்ளனா். மக்களின் சொத்துகளைப் பறித்து, தங்களின் வாக்கு வங்கிக்கு வழங்குவதே அவா்களின் திட்டம்.

‘திரிணமூல் காங்கிரஸின் அரசியல்’: பதோஹி மக்களவைத் தொகுதியில் எதிா்க்கட்சிகள் சாா்பில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் களமிறக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பின்பற்றும் அரசியலை, உத்தர பிரதேசத்தில் முயற்சிக்க அக்கட்சிகள் விரும்புகின்றன.

ஹிந்துக்கள், தலித் சமூகத்தினா் மற்றும் பெண்களைத் துன்புறுத்துவதும் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துவதுமே திரிணமூல் காங்கிரஸின் அரசியலாகும்.

ராமா் கோயிலை புனிதமற்றது என்று அக்கட்சி குறிப்பிடுகிறது. ஹிந்துக்களை கங்கையில் மூழ்கடிக்க வேண்டுமென அக்கட்சி எம்எல்ஏக்கள் பேசுகின்றனா். இத்தகைய அரசியலை முயற்சிக்க நினைக்கும் காங்கிரஸ்-சமாஜவாதிக்கு படுதோல்வியே மிஞ்சும் என்றாா் பிரதமா் மோடி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com