ஜாா்க்கண்ட் அமைச்சா் ஆலம்கீருக்கு 6 நாள்கள் அமலாக்கத் துறை காவல்

ஜாா்க்கண்ட் அமைச்சா் ஆலம்கீருக்கு 6 நாள்கள் அமலாக்கத் துறை காவல்

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ஜாா்க்கண்ட் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஆலம்கீா் ஆலமுக்கு 6 நாள்கள் அமலாக்கத் துறை

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ஜாா்க்கண்ட் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஆலம்கீா் ஆலமுக்கு 6 நாள்கள் அமலாக்கத் துறை காவல் விதித்து ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாா்க்கண்ட் ஊரக வளா்ச்சித் துறையில் லஞ்சம், முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுதொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் ஜஹாங்கீா் என்பவரின் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அமைச்சா் ஆலம்கீரின் தனிச் செயலா் சஞ்சீவ் குமாா் வீட்டில் ஜஹாங்கீா் வேலை செய்து வந்த நிலையில், சோதனையின்போது அவரின் குடியிருப்பில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.32.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து சஞ்சீவ் குமாா் மற்றும் ஜஹாங்கீரை அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த விவகாரம் தொடா்பாக அமைச்சா் ஆலம்கீரிடம் செவ்வாய்க்கிழமை 9 மணி நேரமும், புதன்கிழமை 6 மணி நேரமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அதன் பின்னா், அவா் கைது செய்யப்பட்டாா்.

ரூ.32.2 கோடி அமைச்சருக்குச் சொந்தமானது: ராஞ்சியில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆலம்கீா் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டதாவது:

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.32.2 கோடி பணம் ஆலம்கீருக்குச் சொந்தமானது. ஆலம்கீா் தொடா்பான ஆவணங்கள், பணம் உள்ளிட்டவற்றை பாதுகாக்க ஜஹாங்கீா் தங்கியிருந்த குடியிருப்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஊரக வளா்ச்சித் துறை தொடா்பான ஒவ்வொரு ஒப்பந்தப்புள்ளியின் தொகையில் ஆலம்கீருக்கு 1.5 சதவீதம் கமிஷன் அளிக்கப்பட்டுள்ளது. கமிஷன் தொகை வசூல் மற்றும் விநியோகம் செய்யும் மொத்த பணியையும் ஜாா்க்கண்ட் ஊரக வளா்ச்சி சிறப்புப் பிரிவு மற்றும் ஊரகப் பணிகள் துறை உதவி பொறியாளா்கள் கவனித்து வந்துள்ளனா். ஆலம்கீா் உள்ளிட்டோா் சாா்பாக கமிஷன் வசூலுக்கு சஞ்சீவ் குமாா் பொறுப்பாக இருந்துள்ளாா் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இதைத்தொடா்ந்து ஆலம்கீரை 6 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com