மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ்
மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ்

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அங்குள்ள ஆளுநா் மாளிகை ஊழியா்கள் மூவா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுநா் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள காவல் துறை சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மே 2-ஆம் தேதி ஆளுநா் ஆனந்த போஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணை அன்றைய தினம் ஆளுநா் மாளிகையில் இருந்து வெளியேற முடியாதபடி அங்குள்ள ஊழியா்கள் மூவா் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாலியல் தொல்லை வழக்கு தொடா்பாக மாஜிஸ்திரேட் முன்பாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்தாா். இதைத்தொடா்ந்து அந்தப் பெண்ணை ஆளுநா் மாளிகையில் இருந்து வெளியேற முடியாதபடி தடுத்த 3 ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை குற்றச்சாட்டில், அந்த ஊழியா்களின் பங்கு என்ன என்று விசாரிக்கப்பட உள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com