பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் மோடி பொது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

புது தில்லி: ஹிந்து-முஸ்லிம் என்று நாள்தோறும் பிரித்துப் பேசுவதால் பிரதமர் மோடி பொது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தியாளருக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கார்கே கூறியதாவது:

பிரதமர் மோடியின் நோக்கம் பரிசுத்தமானதாக இல்லை. தேர்தல் பிரசாரத்தின்போது ஹிந்து-முஸ்லிம் என்று பிரித்துப் பேசும் அவர் வெறுப்பூட்டும் வகையில் பேசுகிறார். பட்ஜெட்டில் 15 சதவீதம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுகிறது என்று அவர் கூறுகிறார். இது போன்ற கருத்துகளைக் கூறுவதன் மூலம் அவரே சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகிறார்.

மறுபுறம், ஹிந்து-முஸ்லிம் என்று பிரித்துப் பேசினால் தனக்கு பொது வாழ்க்கையில் தொடரும் உரிமை இல்லை என்று அவரே கூறுகிறார். ஆனால் தினந்தோறும் இதே வகையில் பேசுவதால் பிரதமர் பொது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்.

இந்த விஷயத்திலாவது தான் கூறியபடி அவர் நடக்க வேண்டும். அவர் தனது தவறை ஒப்புக் கொள்வதுமில்லை; மன்னிப்பு கேட்பதும் இல்லை.

அனைவரையும் அரவணைத்துச் செல்வதாக அவர் கூறிக் கொள்கிறார். எனினும் வாக்குகளைப் பிரிப்பதற்காக அவர் தொடர்ந்து வெறுப்பூட்டும் வகையில் பேசுகிறார். அரசியல் சாசனம் அல்லது முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுவோரை அவர் எப்போதாவது கண்டித்தாரா? பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் பழங்குடி இனத்தவர் மீது சிறுநீர் கழித்த சம்பவங்களையும் அவர் கண்டித்தாரா?

தேர்தல் பிரசாரத்துக்கு அவர் கோடிக்கணக்கில் செலவழிக்கிறார். அவர் வெறுப்பைப் பரப்புகிறார். அதனால்தான் அன்புக்கான கடையை தான் அமைக்க உள்ளதாக எங்கள் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி கூறினார்.

தனிமனிதராக அனைத்தையும் தானே செய்ய வேண்டும் என்று மோடி விரும்புகிறார். ஒரே ஒரு தலைவரால் இந்த நாட்டை நடத்த முடியும் என்பது அவரது சிந்தனையாக உள்ளது.

ஒருசாராரைத் திருப்திப்படுத்தும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுவதாக பிரதமர் குறைகூறுகிறார். எந்தச் சமூகத்திலும் உள்ள ஏழை மக்களுக்கு உதவுவது திருப்திப்படுத்துவது ஆகாது. எந்தச் சமூகத்துக்கு எதிராகவும் அநியாயம் நடைபெறுவதைத் தடுப்பது திருப்திப்படுத்துவது ஆகாது.

உண்மையில் பாஜகதான் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறது. ஏழைகளுக்கு கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்டவற்றைக் கொடுப்பதோ, சிறப்புப் பள்ளிகள் மூலம் முஸ்லிம்களுக்கு கல்வியைக் கொடுப்பதோ திருப்திப்படுத்தும் செயல் ஆகாது.

எங்கள் கட்சி எந்த ஒரு தனிமனிதருக்கோ, மோடிக்கோ எதிரானதல்ல. மோடி பின்பற்றும் சித்தாந்தத்தையே எங்கள் கட்சி எதிர்க்கிறது. சமூகத்தில் பிளவை ஏற்படுத்த அவர்களின் சித்தாந்தம் முயற்சிக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் தொடர்வதற்காக மோடி ஊழல் நடைமுறைகளைப் பின்பற்றுகிறார். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி மாநிலங்களில் எதிர்க்கட்சி அரசுகளை அவர் கவிழ்க்கிறார்.

ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் தலைவர்களை பாஜகவில் சேர்த்துள்ளதன் மூலம் பிரதமரின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com