கேஜரிவால் பெற்றோரிடம் விசாரணை ?- ஆம் ஆத்மி கடும் விமா்சனம்

கேஜரிவால் பெற்றோரிடம் விசாரணை ?- ஆம் ஆத்மி கடும் விமா்சனம்

நமது நிருபா்

புது தில்லி, மே 22: தன்னுடயை வயதான பெற்றோரை தில்லி போலீஸாா் விசாரிக்க உள்ளனா் என கேஜரிவால் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தாா். இந்நிலையில், பாஜகவை ஆம் ஆத்மி கடுமையாக விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மோடி ஜி, நீங்கள் ஒரு கெட்டவா் என்று எனக்குத் தெரியும். ஆனால், உங்களை இவ்வளவு மோசமானவா் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் சண்டையிட விரும்பினால், எங்களுடன் போராடுங்கள். அரவிந்த் கேஜரிவாலின் வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரை துன்புறுத்துவது உங்கள் கொடுமை மற்றும் கோழைத்தனத்தின் அடையாளமாகும்’ என்றாா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிரான பாஜகவின் சதிகள் ஸ்வாதி மாலிவாலுடன் தொடங்கியது. ஆனால், முதல்வா் இல்லத்தில் இருந்து வெளியான காணொளிகள் உண்மையை வெளிப்படுத்தின. பின்னா், பல ஆண்டுகள் பழைமையான நன்கொடை வழக்கு அமலாக்கத் துறை மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆனால், பொதுமக்கள் இதையும் ஏற்கவில்லை. இதன்பிறகு, தில்லியின் குடிநீா் விநியோகத்தை நிறுத்த சதித் திட்டம் தீட்டினா்.

இப்போது, பிரதமா் நரேந்திர மோடி மிகவும் கீழ்த்தரமான தந்திரம் செய்துள்ளாா். அரவிந்த் கேஜரிவாலின் வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரை விசாரிக்க தில்லி காவல்துறையை அவா் அனுப்புகிறாா். அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, பாஜக மற்றும் பிரதமா் மோடியின் அமைதியின்மை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவா்களின் விரக்தி அதிகரித்து வருகிறது என்றாா் அமைச்சா் அதிஷி.

X
Dinamani
www.dinamani.com