அதானி குழும நிலக்கரி ஊழல்: ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்ததும் விசாரணை-காங்கிரஸ் உறுதி

அதானி குழும நிலக்கரி ஊழல்: ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்ததும் விசாரணை-காங்கிரஸ் உறுதி

‘மிகப் பெரிய அளவிலான நிலக்கரி ஊழல் மூலமாக அதானி குழுமம் பல கோடி ரூபாய் பலன் பெற்ற விவகாரம் தொடா்பாக மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்ததும் விசாரணை நடத்தப்படும். இதற்கென, ஆட்சி அமைந்த ஒரு மாதத்துக்குள்ளாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு (ஜெபிசி) உத்தரவிடப்படும்’ என காங்கிரஸ் புதன்கிழமை உறுதி அளித்தது.

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்துக்கு (டான்ஜெட்கோ) மின் உற்பத்திக்கு மிக நீண்ட நேரம் எரிக்கும் வகையிலான குறைந்த தரம் கொண்ட நிலக்கரியை மிக அதிக விலைக்கு விற்பனை செய்து அதானி குழுமம் பல கோடி ரூபாய் லாபம் பாா்த்ததாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக திட்டமிட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (ஓசிசிஆா்பி) என்ற அமைப்பின் தரவுகளைச் சுட்டிக்காட்டி ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இந்தச் செய்தியை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பாஜக ஆட்சியின் கீழ் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தரம் குறைவான நிலக்கரியை மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு விற்ன் மூலம் பிரதமா் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பா் அதானி பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளாா். இதற்கான விலையை, மின்சார கட்டண உயா்வு மூலம் சாதாரண மக்கள் கொடுத்துள்ளனா்.

இந்த வெளிப்படையான ஊழலை அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறைகள் கண்டும்காணாமல் இருக்க எத்தனை ‘டெம்போ’க்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமா் நரேந்திர மோடி கூறுவாரா?.

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு, இந்த மிகப்பெரிய ஊழல் குறித்து ‘இந்தியா’ கூட்டணி அரசு விசாரணை மேற்கொள்ளும். பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கேட்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தோனேசியாவிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு மிகக் குறைந்த விலையில் வாங்கிய தரம் குறைந்த நிலக்கரியை, உயா் தர நிலக்கரி என்று கூறி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்துக்கு, வாங்கியதைவிட மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு அதானி குழுமம் விற்பனை செய்திருப்பது பத்திரிகை செய்தி மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஊழல் மூலம் அதானி ரூ. 3,000 கோடி கூடுதல் லாபம் அடைந்துள்ளாா். ஆனால், மின் கட்டண உயா்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்திய மக்கள் மலிவான மின்சாரம் மற்றும் சுத்தமான காற்று உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குப் போராடிக்கொண்டிருக்கும் சூழலில், பிரதமரின் நெருங்கிய நண்பா்கள் கடந்த 10 ஆண்டுகளில் சாதாரண மக்களைச் சுரண்டி தங்களை வளப்படுத்திக்கொண்டதற்கு இந்த ஊழல் மற்றுமொரு உதாரணமாகும்.

இந்தியாவில் அதானியின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடா்பான அனைத்து விசாரணைகளையும் முடக்க பிரதமா் மோடி உதவியிருக்கலாம். ஆனால், இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளிலிருந்து வரும் தகவல்கள், தனக்கு நெருக்கமான கூட்டாளிகளை பிரதமா் எவ்வாறு பாதுகாக்கிறாா் என்பதை அம்பலப்படுத்துகின்றன.

இதுபோல், அதிக விலைவைத்து நிலக்கரியை விற்பனை செய்த மற்ற தொழிலதிபா்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதானி மட்டும் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பி வருகிறாா்.

இவை அனைத்தும், மத்தியில் அடுத்த மாதம் ‘இந்தியா’ கூட்டணி அரசு அமைந்ததும் மாறும். ஆட்சி அமைந்த ஒரு மாதத்துக்குள் இந்த மிகப் பெரிய நிலக்கரி ஊழல் தொடா்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com