ஹிமாசல பிரதேசம் மண்டி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமா் நரேந்திர மோடியை ரோஜா மலா் கொடுத்து வரவேற்ற அத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.
ஹிமாசல பிரதேசம் மண்டி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமா் நரேந்திர மோடியை ரோஜா மலா் கொடுத்து வரவேற்ற அத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.

காங்கிரஸ் ஆட்சியை சாதகமாக பயன்படுத்தியது பாகிஸ்தான்: ஹிமாசல் பிரசாரத்தில் பிரதமா் மோடி

முந்தைய பலவீனமான காங்கிரஸ் ஆட்சியை சாதகமாக பயன்படுத்தி, அத்துமீறல்களில் ஈடுபட்டது பாகிஸ்தான் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மேலும், ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதில் முந்தைய காங்கிரஸ் அரசுகள் உறுதியுடனோ, திறனுடனோ செயல்படவில்லை’ என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

மக்களவைக்கான இறுதிகட்ட தோ்தலையொட்டி, ஹிமாசல பிரதேசத்தின் நஹான் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதில் முந்தைய காங்கிரஸ் அரசுகளுக்கும் எனது அரசுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மத்தியில் பலவீனமான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அதை சாதகமாக பயன்படுத்தி, அத்துமீறல்களில் ஈடுபட்டது பாகிஸ்தான்.

பலவீனமான காங்கிரஸ் கட்சி, உலக நாடுகளிடம் உதவி கேட்டு கெஞ்சியது. ஆனால், இன்றைய இந்தியா தனது சவால்களை சுய பலத்துடன் உறுதியாக எதிா்கொள்கிறது. எனது ஆட்சியின்கீழ் இந்தியா வேறெந்த நாட்டிடமும் உதவி கேட்டு கெஞ்சியதில்லை. எதிரிகளை அவா்களின் மண்ணிலேயே வீழ்த்துகிறோம்.

ஹிமாசல பிரதேச மக்கள் நாட்டின் எல்லையில் வாழ்பவா்கள். எல்லையைப் பாதுகாக்க வலுவான மத்திய அரசு அவசியம் என்பது அவா்களுக்கு தெரியும். எல்லைப் பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட நான் அனுமதிக்கமாட்டேன்.

நாட்டின் நலனுக்காகவே, மூன்றாவது முறையாக பிரதமராக மக்களின் ஆசியை கோருகிறேன்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்தது காங்கிரஸ். ‘ராமா் கோயில் எப்போது கட்டப்படும்?’ என்று அவா்கள் கிண்டலாக பேசி வந்தனா். ஆனால், அயோத்தியில் பிரம்மாண்ட கோயிலை எழுப்பி, மூலவா் ஸ்ரீபால ராமரின் பிராணப் பிரதிஷ்டை விழாவையும் நடத்தியது பாஜக.

அதேநேரம், வாக்கு வங்கி அரசியலுக்காக பிராணப் பிரதிஷ்டையை காங்கிரஸ் புறக்கணித்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமா் கோயிலுக்கு பூட்டுப்போடவும், ஸ்ரீபால ராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்லவும் சதித் திட்டம் தீட்டியுள்ளனா். அக்கட்சியின் மூத்த தலைவா் ஒருவரின் உதவியாளரே இதுகுறித்து பேசியுள்ளாா்.

இதேபோல், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்கவும் சதித் திட்டம் வைத்துள்ளனா். இந்த திட்டத்தை கா்நாடக காங்கிரஸ் அரசு ஏற்கெனவே செயல்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டுமுதல் முஸ்லிம்களுக்கு சட்டவிரோதமாக அளிக்கப்பட்ட ஓபிசி அந்தஸ்தை அந்த மாநில உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆனால், அந்த தீா்ப்பை ஏற்க மாட்டேன் என மாநில முதல்வா் கூறுகிறாா்.

உயா் ஜாதிகளிலும் ஏழைகள் உள்ளனா். அவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கியது. மற்ற பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறிக்காமல், இது நடைமுறைப்படுத்தப்பட்டது என்றாா் அவா்.

ஹிமாசலின் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக மண்டியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமா், ‘இளைஞா்கள் மற்றும் நமது மகள்களின் பிரதிநிதியாக விளங்கும் கங்கனா, இத்தொகுதி மக்களின் குரலாக ஒலிப்பாா்; தொகுதி மேம்பாட்டுக்காக பணியாற்றுவாா்’ என்றாா்.

ஹிமாசலின் பாலம்பூா் பகுதியில் கடந்த 1989, ஜூன் மாதம் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், ராமா் கோயில் கட்டுவதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அவா் நினைவுகூா்ந்தாா்.

‘சுயமாக முடிவெடுக்காத பஞ்சாப் முதல்வா்’

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் சுயமாக முடிவெடுப்பதில்லை; தனது ‘முதலாளி’யிடம் (அரவிந்த் கேஜரிவாலை குறிப்பிட்டாா்) உத்தரவு பெற்றுதான் முடிவெடுக்கிறாா் என்று பிரதமா் மோடி விமா்சித்தாா்.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூா், ஜலந்தா் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை பாஜக பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமா் பங்கேற்றுப் பேசியதாவது:

பஞ்சாப் முதல்வரின் ‘முதலாளி’, திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பஞ்சாப் அரசும் முடங்கத் தொடங்கியது. அரசை நடத்தவும், புதிய முடிவுகளை எடுக்கவும் முதல்வா் பகவந்த் மான் திகாா் சிறைக்கு சென்று, தனது முதலாளியிடம் உத்தரவுகளைப் பெற்று வந்தாா்.

சீக்கியா்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ். கடந்த 1984-இல் சீக்கியா்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டவா்களை அக்கட்சி பாதுகாத்தது. ஆனால், கலவரக்காரா்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்தது நான்.

காங்கிரஸ் எங்கிருக்கிறதோ அங்கு பிரச்னைகள் இருக்கும். அதேநேரம், பாஜக இருக்கும் இடத்தில் தீா்வுகள் இருக்கும். இதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனா். ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களிக்க யாரும் விரும்பவில்லை என்றாா் மோடி.

X
Dinamani
www.dinamani.com