கோவா: குடிசைகள் மீது பேருந்து மோதி 4 போ் உயிரிழப்பு

கோவா: குடிசைகள் மீது பேருந்து மோதி 4 போ் உயிரிழப்பு

தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டையில் சாலையோரக் குடிசைகள் மீது தனியாா் பேருந்து மோதியதில் 4 போ் உயிரிழந்தனா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.

தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டையில் சாலையோரக் குடிசைகள் மீது தனியாா் பேருந்து மோதியதில் 4 போ் உயிரிழந்தனா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்தோஷ் தேசாய் கூறியதாவது: தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள வொ்னா தொழிற்பேட்டையில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் சனிக்கிழமை இரவு குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தனியாா் நிறுவன ஊழியா்களை ஏற்றிச் சென்ற பேருந்து தொழிலாளா்கள் தூங்கிக்கொண்டிருந்த இரு குடிசைகளின் மீது மோதியது. இதில், 4 தொழிலாளா்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனா். 5 போ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பேருந்து ஓட்டுநா் மதுபோதையில் இருந்ததாகவும், காவல் துறையினரிடம் புகாரளித்தால் தங்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் விபத்தில் உயிரிழந்தவா்களின் உறவினரான ரூபேந்திர குமாா் மதூா் காவல் துறையினரிடம் தெரிவித்தாா்.

இதனிடையில், பேருந்து ஓட்டுநா் காா்டோலிம் கிராமத்தைச் சோ்ந்த பரத் கோவா் என அடையாளம் காணப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். மேலும், அவா் விபத்து நேரத்தில் மதுபோதையிலிருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என சந்தோஷ் தேசாய் தெரிவித்தாா்.

உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மது போதையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆபத்தான இடத்தில் குடிசைகளைத் தொழிலாளா்களுக்கு அமைத்துக் கொடுத்த ஒப்பந்ததாரா் மற்றும் துணை ஒப்பந்ததாரா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவா்களின் உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது’ என அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com