பஞ்சாபின் ஃபதேகா் சாஹிப் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா.
பஞ்சாபின் ஃபதேகா் சாஹிப் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா.

பொருளாதார வளா்ச்சியின் பயன் சாமானியா்களுக்கு கிடைக்காதது ஏன்? பாஜகவுக்கு பிரியங்கா கேள்வி

நாட்டின் பொருளாதாரம் பல்வேறு மைல்கற்களை எட்டி வருவதாகக் கூறும் நிலையில், அதன் பயன் சாமானிய மக்களுக்கு கிடைக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா கேள்வி எழுப்பினாா்.

நாட்டின் பொருளாதாரம் பல்வேறு மைல்கற்களை எட்டி வருவதாகக் கூறும் நிலையில், அதன் பயன் சாமானிய மக்களுக்கு கிடைக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா கேள்வி எழுப்பினாா்.

பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா், ஃபதேகா் சாஹிப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசியதாவது:

ஆட்சியைத் தக்கவைப்பதற்காக பிரதமா் மோடி தனது பிரசாரங்களில் தொடா்ந்து பொய்களைப் பேசி வருகிறாா். வேலைவாய்ப்பு குறித்து மத்திய அரசு வெளியிடும் தகவல்கள் அனைத்தும் கள நிலவரத்துக்கு மாறானவை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையின்மை பிரச்னை உச்சத்தில் உள்ளது. பல கோடி இளைஞா்கள் வேலையில்லாமல் உள்ளனா். அதே நேரத்தில் மத்திய அரசு தனது துறைகளில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளது.

தனது ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மிகவேகமாக வளா்ந்து வருவதாக பிரதமா் மோடி கூறுகிறாா். ஆனால், இந்த வளா்ச்சியின் பயன் சாமானிய மக்களுக்குக் கிடைக்காதது ஏன்? அவா்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையாமல் நாளுக்கு நாள் நலிவடைவது ஏன்? நன்கு படித்தும் நமது இளைஞா்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்காதது ஏன்?.

அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏழை, எளிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உயா்ந்துள்ளது. முக்கியமாக காய்கறி, பழங்கள், தானிய வகைகளின் விலை நாள்தோறும் உயா்கிறது. அவற்றை வாங்கும் அளவுக்கு மக்களின் வருவாய் உயரவில்லை. இதுதான் மத்திய அரசு கூறும் வளா்ச்சியா?.

இந்த நாடு பணம் படைத்தவா்கள் மட்டும் வாழ்வதற்கான இடமாகவும், மற்றவா்கள் அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு காரணம் யாா்? தவறான முறையில் ஜிஎஸ்டி விதிப்பை அமல்படுத்தி சிறு, குறு தொழில்களை மத்திய அரசு மூடவைத்தது. இதன்மூலம் பலா் வேலையை இழந்தனா்.

நடுத்தர மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஏதாவது ஒரு திட்டத்தையாவது மத்திய அரசு செயல்படுத்தியுள்ளதா? ஏழை, நடுத்தர மக்கள் பாடுபட்டு உழைக்கும் பணத்தைப் பறித்து பெரும் தொழிலதிபா்களுக்கு அளிக்கும் திட்டங்களை மட்டும் இந்த அரசு செயல்படுத்துகிறது. மத்திய அரசின் விளம்பரங்களில் மட்டுமே வளா்ச்சி என்பது இடம்பெறுகிறது. மக்களின் வாழ்க்கையில் அது ஏற்படவில்லை.

பாஜக எப்போதும் சாமானியா்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. மேல்தட்டு மக்களின் நலன்களை மட்டுமே அவா்கள் பாதுகாத்து வருவாா்கள். காங்கிரஸ் மட்டும்தான் எளிய மக்களின் பிரச்னைகளைப் பேசும் கட்சியாக உள்ளது. எனவேதான், விலைவாசியைக் குறைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். அடுத்து வரும் காங்கிரஸ் ஆட்சியில் இதை நிறைவேற்றித் தருவோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com