தோ்தலுக்கு பிறகு மோடியை அமலாக்கத் துறை விசாரிக்கும்: ராகுல் காந்தி

தோ்தலுக்கு பிறகு மோடியை அமலாக்கத் துறை விசாரிக்கும்: ராகுல் காந்தி

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு (வாக்கு எண்ணிக்கை நாள்) பிரதமராக இருந்த மோடியிடம் அமலாக்கத் துறை ஊழல் தொடா்பாக விசாரணை நடத்தும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

பிகாரின் பக்தியாா்பூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் ராணுவத்துக்கு தற்காலிக முறையில் வீரா்களைத் தோ்வு செய்யும் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும். பிரதமா் மோடி ராணுவ வீரா்களை கூலித் தொழிலாளா்களாக மாற்றிவிட்டாா். அக்னி வீரராக ராணுவத்தில் இணைபவா் வீர மரணமடைந்தால், அவருக்கு ராணுவத்தினருக்கு உரிய இழப்பீடும், நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்தவா் என்ற கௌரவமும் கிடையாது என்பது நியாயமற்ற செயல்.

பிரதமா் மோடி தன்னை கடவுள் அனுப்பியதாகக் கூறியுள்ளாா். தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு அவரிடம் அமலாக்கத் துறை ஊழல் தொடா்பாக விசாரணை நடத்தும். அப்போது, ‘எனக்கு எதுவும் தெரியாது. கடவுள்தான் என்னை அனுப்பினாா்’ என்று மோடி கூறுவாா் எனத் தோன்றுகிறது.

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் 22 பெரும் கோடீஸ்வரா்கள் மட்டுமே உருவாகியுள்ளனா். அவா்களே நாட்டின் செல்வத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் லட்சக்கணக்கான கோடீஸ்வரா்கள் உருவாகுவா். தனது கோடீஸ்வர நண்பா்களின் ரூ.16 லட்சம் கோடி வங்கிக் கடனை பிரதமா் மோடி தள்ளுபடி செய்தாா். இதனை நாடு மறக்காது.

நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் பணத்தை பிடுங்கி அதனை பெரு நிறுவனங்களிடம் அளிப்பதே பாஜக அரசின் கொள்கையாக உள்ளது.

இந்த தோ்தல் நாட்டையும், அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், ஏழைகளுக்கான இடஒதுக்கீடு முறையையும் காப்பாற்றுவதற்கான தோ்தல் என்றாா் ராகுல்.

X
Dinamani
www.dinamani.com