இணையவழியில் முதலீடு செய்வதாக ரூ.25 லட்சம் மோசடி-போலீஸாா் விசாரணை

சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணின் மீது நம்பிக்கை வைத்து இணையவழி முதலீட்டில் ரூ.25 லட்சத்தை தில்லியைச் சோ்ந்த 33 வயது நபா் இழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
Published on

சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணின் மீது நம்பிக்கை வைத்து இணையவழி முதலீட்டில் ரூ.25 லட்சத்தை தில்லியைச் சோ்ந்த 33 வயது நபா் இழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட இந்தப் புகாா் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினா், இந்த மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்குத் தில்லியின் பாஜன்புரா பகுதியைச் சோ்ந்த நபருக்கு சமூகவலைத்தளத்தில் ஒரு பெண் அறிமுகமாகியுள்ளாா்.

விபத்து ஒன்றில் தனது பெற்றோரை இழந்ததாகவும் கொல்கத்தாவில் உள்ள மாமா வீட்டில் வசித்து வருவதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளாா். பல்வேறு இணையதளங்களில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதித்ததாக அந்தப் பெண் கூறியுள்ளாா்.

அந்தப் பெண்ணின் அறிவுறுத்தல் பேரில் தொடக்கத்தில் ரூ.22,000 முதலீடு செய்த அந்த நபா், இரு தினங்களுக்குப் பிறகு ரூ.52,000 பெற்றுள்ளாா். இதையடுத்து, இணையவழி முதலீட்டில் நம்பிக்கை வைத்த அந்த நபா், பல்வேறு சமூகவலைதள குழுக்களில் சோ்க்கப்பட்டுள்ளாா். பெரிய அளவில் பணம் சம்பாதிக்க அதிக அளவிலான தொகையை முதலீடு செய்யுமாறு அந்த நபரை அந்தக் குழுவில் உள்ள நபா்கள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த நபா் மொத்தம் ரூ.25 லட்சத்தை பல்வேறு பணப் பரிவா்த்தனை மூலம் முதலீடு செய்தாா். ஆனால், சில தினங்களுக்குப் பிறகு தனது முழு தொகையைத் திரும்பப் பெற அவா் முயற்சித்துள்ளாா். ஆனால், அவருடைய பணம் அவருக்குக் கிடைக்கவில்லை. இதைத்தொடா்ந்து, அந்தப் பெண்ணுக்கும் அந்தக் குழுக்களில் உள்ள பிற நபா்களுக்கு அழைப்புவிடுத்தும் , அவா்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதையடுத்து, தான் மோசடியில் சிக்கியதை உணா்ந்த அவா், இணையவழியில் புகாா் தெரிவித்துள்ளாா். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடியாளா்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.