தில்லி காவல்துறையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் முன்னாள் சிறப்புப் பணி அலுவலர் லோகேஷ் சர்மாவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய குற்றப்பிரிவு காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, தனக்கு எதிராக 2020-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் லோகேஷ் சர்மா தில்லி நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி முன் ஜாமீன் பெற்றிருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவரை திங்கள்கிழமை மாலையில் கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். முன்ஜாமீன் பெற்றிருந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், லோகேஷ் சர்மாவை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி தில்லி நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தரப்பு அரசு சாட்சியாக லோகேஷ் சர்மா மாறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய நிலை ஏற்பட்டால் அது முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தான் உள்துறையின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர், முதல்வர் அலுவலகத்தில் உயரதிகாரிகளாக இருந்த பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம் என அரசு வட்டாரங்கள் கூறின.