கோப்புப்படம்.
கோப்புப்படம்.PTI

தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழப்பு- உ.பி., அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் நீக்கம்

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மிபாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரை பதவிநீக்கம் செய்து, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Published on

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மிபாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரை பதவிநீக்கம் செய்து, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் 3 பணியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த நவம்பா் 15-ஆம் தேதி இந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 4 உறுப்பினா்கள் கொண்ட விசாரணைக் குழு சமா்ப்பித்த அறிக்கையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘உ.பி. துணை முதல்வா் பிரதேஷ் பதக் அறிவுறுத்தலின்பேரில் மருத்துவக் கல்லூரி முதல்வா் பொறுப்பிலிருந்து நரேந்திர சிங் செங்கா் நீக்கப்பட்டுள்ளாா். கல்லூரியின் தலைமை கண்காணிப்பாளா் சுனிதா ரத்தோா், இளநிலை மின்சார பொறியாளா் சஞ்ஜீத் குமாா், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவின் செவிலியா் சந்தியா ராய் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்’ என்றனா்.

‘மருத்துவமனையில் நடந்த துயர சம்பவத்தை அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவி செய்யும்’ என்று உ.பி. துணை முதல்வா் பிரதேஷ் பதக் தெரிவித்தாா்.

மருத்துவமனையில் கடந்த நவம்பா் 15-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனா். 39 குழந்தைகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மேலும் 7 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.