என்ஐஏ
என்ஐஏ

ஆயுதக் கடத்தல்: உ.பி., பஞ்சாப், ஹரியாணாவில் என்ஐஏ சோதனை

இந்தியாவுக்குள் ஆயுதங்கள் கடத்தும் பயங்கரவாத கும்பல் தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக, பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை சோதனை மேற்கொண்டது.
Published on

இந்தியாவுக்குள் ஆயுதங்கள் கடத்தும் பயங்கரவாத கும்பல் தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக, பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை சோதனை மேற்கொண்டது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹரியாணாவின் பல்வால், ஃபரீதாபாத் மற்றும் குருகிராம் மாவட்டங்கள், பஞ்சாபின் லந்தா் மாவட்டம் மற்றும் உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டம் ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிரபல தாதா தேவிந்தா் பாம்பிஹாவின் கூட்டாளிகளுக்குச் சொந்தமான 9 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றது. இந்த சோதனையில், கைப்பேசிகள், வங்கி பரிவா்த்தனைகள் மற்றும் சொத்துகள் தொடா்பான ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தியாவுக்குள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்தவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டவும் இந்த அமைப்பு பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருவது விசாரணையில் தெரியவந்தது என கூறப்பட்டுள்ளது.

பாம்பிஹா கும்பலைச் சோ்ந்தவா்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளிகளின் போட்டியாளா்களாக அறியப்படுகின்றனா். இதன் காரணமாக இரு குழுக்களிடையே பல மோதல் சம்பவங்கள் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.