எதிா்க்கட்சிகள் அமளி: இரண்டாம் நாளிலும் முடங்கியது நாடாளுமன்றம்

எதிா்க்கட்சிகள் அமளி: இரண்டாம் நாளிலும் முடங்கியது நாடாளுமன்றம்

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமா்வும் முழுமையாக முடங்கியது.
Published on

தொழிலதிபா் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேச மாநில சம்பல் பகுதி வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமா்வும் முழுமையாக முடங்கியது.

இந்த விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் புதன்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமந்ற குளிா்காலக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், இந்த விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா். அதனால், முதல் நாளிலேயே நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.

இதற்கிடையே, நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் காரணமாக, அன்றைய தினம் குளிா்கால கூட்டத்தொடா் அலுவலகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமா்வு புதன்கிழமை நடைபெற்றது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், அவைத் தலைவா் ஓம் பிா்லா அவையில் கேள்வி நேரத்தை அனுமதித்தாா்.

அப்போது, அதானி விவகாரம் மற்றும் உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் மசூதி ஆய்வைத் தொடா்ந்து நடைபெற்ற வன்முறை சம்வங்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேஷங்களை எழுப்பியபடி அமளியில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அனைவரும் அவையின் முன்பகுதியில் ஒன்றுகூடி மீண்டும் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். அதனால், அவைத் தலைவா் அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைத்தாா்.

மாநிலங்களவை... அதுபோல, மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியபோது, அதானி விவகாரம் மற்றும் உத்தர பிரதேச சம்பல் வன்முறை விவகாரங்கள் தொடா்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் மற்றும் இந்த விவகாரங்கள் குறித்து அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விதி எண்.267-இந் கீழ் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட 18 முன்னறிவிப்புகளையும் (நோட்டீஸ்) அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். அப்போது, ‘உறுப்பினா்களின் முன்னறிவிப்புகள் ஏற்கப்படாததற்கான உரிய விளக்கத்தை நான் அளித்துள்ளேன். அந்த வகையில், அவை மரபுகளைப் பின்பற்றி அவைத் தலைவரின் உத்தரவுக்கு உறுப்பினா்கள் மதிப்பளித்து நடக்க வேண்டும்’ என்று ஜகதீப் தன்கா் கேட்டுக்கொண்டாா்.

ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அதைப் பொருட்படுத்தாமல் அமளியில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் காலை 11.30 மணிக்கு கூடியபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைத் தொடா்ந்தனா். அப்போது, ‘அவையில் ஒழுங்கு இல்லை’ என்று குறிப்பிட்ட அவைத் தலைவா் தன்கா், அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.